Last Updated : 02 May, 2020 03:28 PM

 

Published : 02 May 2020 03:28 PM
Last Updated : 02 May 2020 03:28 PM

சிதம்பரத்தில் உதவிக்கரம் நீட்டிய தன்னார்வக் குழுவினர்; நெகிழ்ச்சியுடன் தமிழில் நன்றி தெரிவித்த காஷ்மீர் மாணவர்கள்

காஷ்மீர் மாணவர்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்

கடலூர்

சிதம்பரத்தில் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தன்னார்வக் குழுவினருக்குக் காஷ்மீர் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தமிழில் நன்றி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் அண்ணாமலை நகர் பகுதியில் தனித்தனியாக வீடு எடுத்துத் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீர் ஏதுமின்றி வெளியே சென்று உதவி கேட்க வெட்கப்பட்டு, அண்மையில் பெய்த மழை நீரைப் பிடித்து வைத்து மூன்று நாட்களாகக் குடிநீரைக் குடித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்த சிறு தொகையும் உடன் படிக்கும் மாணவர் ஒருவரின் மருத்துவத்திற்குச் செலவழித்து விட்டார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அவர்கள் உதவி கேட்கத் தயங்கி, பல்கலைக்கழக ஆசிரியர்களும் குடும்பத்தினரும் தங்கள் நிலையைத் தெரிந்தால் கவலை அடைவார்கள் என்று எண்ணி அவர்களுக்கும் சொல்லாமல் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஓரிடத்தில் கூடி அவர்களின் சூழ்நிலையை விளக்கியும் சிறப்பு ஏற்பாடு செய்து தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் எனவும் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இது பல்கலைக்கழக நிர்வாகம் வரை சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த வீடியோவைப் பார்த்த சிதம்பரத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர் குபேரன், இன்று (மே 2) காஷ்மீர் மாணவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறி உணர்ச்சிவயப்பட்டு, "எங்களிடம் உதவி கேட்டிருக்கக் கூடாதா? எதற்கும் கவலைப்படாதீர்கள்" என்று கூறி முதல் கட்டமாக சிதம்பரம் பகுதி நண்பர்களின் உதவியால் குடிநீர், பிரெட் உள்ளிட்ட உதவிகளைச் செய்துள்ளார்.

இதில் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் 20 மாணவர்களுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபாகரன், வேந்தன் சுரேஷ், மயில்வாகனன், பெருமாள் உள்ளிட்ட தன்னார்வக் குழுவினர் அரிசி, காய்கறிகள், எண்ணெய், சர்க்கரை, மிளகாய்த்தூள், முகக் கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை அவரவர் தங்கியிருக்கும் இடங்களுக்குச் சென்று வழங்கியுள்ளனர்.

காஷ்மீர் மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் உதவி செய்தவர்களுக்குத் தமிழில் நன்றி தெரிவித்தனர்.

இந்த மாணவர்கள் சிறப்பு ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்ப அரசு முயற்சி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x