Published : 20 Aug 2015 12:42 PM
Last Updated : 20 Aug 2015 12:42 PM

அணு உலை பற்றி வெள்ளை அறிக்கை: உதயகுமார் வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலையில் நடப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறும்போது, 'கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கூடங்குளம் முதலாவது அணுஉலை பராமரிப்பு பணிக்காக 2 மாதம் மூடப்படுகிறது என்று கூறியவர்கள், தற்போது அணு உலையில் 3 ல் ஒரு பங்கு எரிபொருளை அகற்ற வேண்டியிருக்கிறது என்றும் அதற்கு மேலும் ஒரு மாதம் தேவை என்றும் கூறுகிறார்கள். இதை ஏன் முதலில் அவர்கள் தெரிவிக்கவில்லை.

பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், பிரதமரிடம் 100 பக்க அறிக்கை அளிக்க வுள்ளார்கள். அதில், கூடங்குளம் அணு உலை கழிவுகள் கடலில் கொட்டப்படுவதாகவும், அணு உலையில் குளறுபடி இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு ள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே கூடங்குளம் அணு உலையில் என்ன நடக்கிறது என்பதை அறிய மத்திய, மாநில அரசுகள் மற்றும் அணுசக்தி துறை இணைந்து வெள்ளை அறிக்கை யாக வெளியிட வேண்டும்.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலை அமைக்கக்கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வரிடமும், திமுக தலைவர் கருணாநிதியிடமும் மனு கொடுத்திருக்கிறோம். அணுஉலைகள் அமைப்பதை எதிர்த்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பல்வேறு அமைப்புகள் இணைந்த அகில இந்திய மக்கள் மேடை அமைப்பின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 11-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்' என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x