Last Updated : 27 Apr, 2020 05:01 PM

 

Published : 27 Apr 2020 05:01 PM
Last Updated : 27 Apr 2020 05:01 PM

வங்கிக் கடனுக்கு வரவு வைக்கப்பட்ட பிரதமர் உதவித்தொகை: விவசாயிகள் அதிருப்தி

சிவகங்கை

பிரதமர் கிசான் திட்ட உதவித்தொகையை வங்கிகள் கடனுக்கு வரவு வைத்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விவசாயத்தை ஊக்குவிக்க பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலரும் வேலையின்றி வீடுகளில் முடங்கியுள்ளனர். இதையடுத்து பிரதமர் கிசான் திட்ட பயனாளிகளுக்கு ரூ.2,000 வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் அந்தத் தொகையை வங்கிகள் விவசாயிகளின் கடனில் வரவு வைத்ததாக புகார் எழுந்துள்ளது. உணவிற்கே சிரமப்படும் நேரத்தில் உதவித்தொகையை கடனுக்கு வரவு வைத்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கள்ளராதினிப்பட்டி விவசாயி காயாம்பு கூறியதாவது: நான் 6 ஏக்கரில் சொட்டுநீர் பாசனத்துடன் கரும்பு சாகுபடி செய்தேன். சொட்டுநீர் பாசனம் உள்ளிட்டவைக்காக படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் பரிந்துரையில் சிவகங்கையில் உள்ள தேசிய வங்கி கிளை மூலம் ரூ.3.80 லட்சம் கடன் பெற்றேன்.

சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆண்டுதோறும் எனக்கு தர வேண்டிய கரும்புக்கான பணத்தில், கடன் தவணை தொகையை பிடித்தம் செய்து வங்கியில் செலுத்தி வந்தது.

கடைசியாக என்னிடம் பிடித்தம் செய்த சில தவணைகளை மட்டும் ஆலை நிர்வாகம் வங்கியில் செலுத்தவில்லை.

மேலும் நான் கடன் பெற்ற வங்கி கிளை ஒக்கூரிலும் உள்ளது. அங்குள்ள எனது சேமிப்பு கணக்கிற்கு பிரதமர் கிசான் திட்ட உதவித்தொகை அனுப்பப்படுகிறது. ஆனால் அந்த தொகையை கடனில் வரவு வைத்ததாக கூறி, வங்கி அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர். என்னை போன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x