Published : 27 Apr 2020 12:08 PM
Last Updated : 27 Apr 2020 12:08 PM

வரத்து அதிகம்; விற்பனை குறைவு: திண்டுக்கல்லில் ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு கொள்முதல்- இழப்பை சந்திக்கும் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்ப பெட்டிகளில் அடுக்கப்படும் தக்காளி பழங்கள்.

திண்டுக்கல்

தக்காளி விளைச்சல் அதிகமாகியும் அதை விற்பனைக்கு அதிகம் அனுப்பமுடியாத நிலையில் தக்காளி விலை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.5 க்கு விவசாயிகளிடம் பெறப்படுகிறது.

வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொள்முதல் விலை குறைவால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி சாகுபடி பரவலாக செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளிகள் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பமுடியாதநிலை உள்ளது.

வரத்து அதிகம், விற்பனை குறைவு காரணமாக சில தினங்களாக தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்தவாரம் மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 க்கு விற்பனையான நிலையில் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

இந்நிலையில் தக்காளி விலை மேலும் குறைந்து இன்று மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.5 க்கு விற்பனையானது. (14 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி ரூ. 70 க்கு விற்பனையானது) இதையடுத்து வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10 வரை இன்று விற்பனையாகியது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், போதிய வாகனபோக்குவரத்து இல்லாததால் வெளிமாநில, வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு காய்கறிகளை அனுப்பிவைப்பது குறைந்துவிட்டது.

மேலும் விற்பனையும் குறைவு என்பதால் வரத்து அதிகரித்து விலைவீழ்ச்சியடைந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக விற்பனை நேரம் குறைவு என்பதால் சிறுவியாபாரிகள் விற்பனையை குறைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் தக்காளி கடந்த ஒருவாரமாக வரத்து அதிகரித்ததும் விலை குறைய காரணமாக உள்ளது, என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், கிராமப்புறங்களில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வாகனங்களில் தக்காளி கொண்டுவர போக்குவரத்து செலவே அதிகம் ஆகிறது. இதில் தக்காளி பறிப்பு கூலிகொடுக்கவேண்டும்.

இத்தனையும் செய்து விற்பனை செய்தால் செலவுதொகை கூட கிடைப்பதில்லை. இழப்பை சந்திக்கவேண்டியநிலையில், தக்காளியை பறிக்காமலேயே செடியில் விட்டுவிடுவது நல்லது என தோன்றுகிறது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x