Published : 18 Aug 2015 09:14 AM
Last Updated : 18 Aug 2015 09:14 AM

கட்சியை பலப்படுத்த தனி வியூகம்: முதல் வரிசை அணியுடன் கூட்டணி நிச்சயம் - தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்

தமிழகத்தில் தமாகாவை பலப் படுத்த தனி வியூகம் அமைத்து செயல்படுகிறோம். 2016-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின் மக்கள் விரும்பும் வகையில் முதல் வரிசையில் உள்ள அணியுடன் கூட்டணி அமைப்போம் என இக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமாகா சார்பில் இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறி யது: கட்சியைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக துணைத் தலைவர்கள், பொதுச்செயலர்கள், வட்டாரத் தலைவர், நகர் தலைவர் என 2,389 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 12,680 கிராம பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து கமிட்டி அமைக்கப் படும். நவம்பர் முதல் வாரத்தில் இப்பணி முடிந்ததும் கட்சியின் மாநாடு தேதி அறிவிக்கப்படும்.

ஆக. 25-ம் தேதி கரூர், 29-ல் திருவள்ளூரில் இளைஞரணி மண் டல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். கட்சியை பலப்படுத் தும் பணி முடியும்போது 2016 பிப்ரவரியில் முதல் வரிசையில் அமரும் இயக்கமாக தமாகா இருக்கும். இதற்காக தனி வியூகம் அமைத்து தீவிரமாக பணியாற்றுகி றோம்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேர வைத் தேர்தலில் அதிமுக, திமுக, ஆள நினைக்கும் கட்சி என எந்த கட்சியாக இருந்தாலும் தனித்துப் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதி. அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கும். தமாகா மக்கள் விரும்பும், முதல் வரிசை கூட்டணியில் இருக்கும். காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் எந்த கூட்டணியில் இருக்கும் என்பது பற்றி கவலையில்லை. எங்களது இலக்கு வெற்றி மட்டுமே. இதன் அடிப்படையில் தேர்தலை சந்திப்போம். பாஜகவுடன் எந்த உறவும் இல்லை. 2016 பிப்ரவரி வரை எங்களது வியூகம் கட்சியைப் பலப்படுத்துவதில் மட்டுமே இருக்கும்.

தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்ற முதல்வர் ஜெயலலி தாவின் அறிவிப்பை ஏற்க மக்கள் தயாராக இல்லை. மின் மிகை மாநிலமாகவும் தமிழகம் இல்லை. நேற்றும், இன்றும்கூட மின்வெட்டு இருந்தது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகம். அவர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் ஆளுங்கட்சி செயல்பட வேண்டும். மதுபான விற்பனையை குறைக்க கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த லாம். நாங்கள் கையெழுத்து இயக் கம் நடத்துகிறோம். மதுவுக்கு எதிராக இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்க வசதி செய் யப்பட்டுள்ளது. அரசு முன்னெச் சரிக்கை நடவடிக்கையுடன் செயல் பட்டு, சமாதான ஏற்பாடுகளை செய்தால் ஜாதிக் கலவரங்களை தடுக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x