Published : 23 Apr 2020 02:04 PM
Last Updated : 23 Apr 2020 02:04 PM
திண்டுக்கல் நகரில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இதை அங்கிருந்த அரசு அதிகாரிகளும் வலியுறுத்தவில்லை.
திண்டுக்கல் மாவட்டம் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் மாவட்ட அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை மொத்தம் 77 பேர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் திண்டுக்கல் நகர சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இன்று(வியாழன்) காலை திண்டுக்கல்லில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கிவைத்தார்.
இதில் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவர் மருதராஜ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
சிறிய அறையில் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கூடியதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் யாரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தவில்லை. கட்சியினரும் சமூக இடைவெளியைக் கண்டுகொள்ளவில்லை.
இதனிடையே நிகழ்ச்சியை முடித்துவிட்டு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். வனவிலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT