Published : 17 Aug 2015 09:02 AM
Last Updated : 17 Aug 2015 09:02 AM
பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் கடந்தாண்டு டிசம்பர் 1-ம் தேதி கொண்டு வந்த புதிய விதிமுறைகளின்படி, பி.எட் மற்றும் எம்.எட். படிப்பு ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக மாறும் என்றும், 100 மாணவர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக இனிமேல் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன், பி.எட். எம்.எட் படிப்புகளுடன் கலை மற்றும் அறிவியல் படிப்புகளையும் கல்வியியல் கல்லூரிகள் நடத்த வேண்டும். இப்புதிய விதிமுறையை 21 நாட்களில் அமல்படுத்துவோம் என்று கல்வியியல் கல்லூரிகள் உத்தரவாதம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. புதிய விதிமுறைகளை அமல்படுத்தாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்காலத்தில் புதிதாக அங்கீகாரம் அளிக்கப்படாது என்றும் எச்சரிக்கப்பட்டது.
இப்புதிய விதிமுறைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்வியியல் கல்லூரிகள் வழக்கு தொடர்ந்தன. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல்அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக உயர்கல்வித் துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT