Published : 20 Apr 2020 08:09 AM
Last Updated : 20 Apr 2020 08:09 AM
தென்காசி மாவட்டம் புளியங் குடியில் நேற்று மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
புளியங்குடி நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நிலை யிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.
சுகாதாரத் துறை துணை இயக்குநர் ராஜா கூறும்போது, புளியங்குடியில் ஒரு முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தினமும் 100 பேர் வீதம், 500 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது என்றார்.
புளியங்குடியை 7 மண்டலங் களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் காவல் உதவி ஆய்வாளா் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய, அவசர உதவி தேவைப்பட்டால் உதவி ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பொதுமக்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பணியில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் ஈடுபட்டுள்ளார். நோய்த்தொற்று கண்டறியப் பட்டவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் கண்டறியும் பணியை சிவகிரி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் மேற்கொண்டு வருகிறார்.
வெளியாட்கள் புளியங் குடிக்குள் வராமல் தடுக்கும் பணி மற்றும் கண்காணிப்பில் புளியங்குடி காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் நேற்று ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT