Last Updated : 15 Apr, 2020 03:20 PM

 

Published : 15 Apr 2020 03:20 PM
Last Updated : 15 Apr 2020 03:20 PM

கடலூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கள்ளச்சாராயம்: போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்தனர்.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சில அத்தியாசியத் தேவைகளுக்காக மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களும் மூடப்பட்டன.

இதனால் மதுப் பிரியர்கள் போதைக்காக ஷேவிங் க்ரீம், சானிடைசரைக் குடித்து உயிரிழந்த சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின. அதேநேரத்தில் கள்ளச் சாராய விற்பனையும் திரைமறைவில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அரசு, டாஸ்மாக் திறக்கப்படாது என திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்த நிலையில்தான் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 பேர் ஒன்றன்பின் ஒருவராக உயிரிழந்ததது கடலூர் மக்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.

கடலூர்-சிதம்பரம் சாலை மார்க்கத்தில் உள்ள ஆலப்பாக்கம் ஆணையம்பேட்டையைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், திங்கள்கிழமை தனது நண்பர் குமரேசன் என்பவர் மூலம் சர்க்கரை ஆலையில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை வாங்கிவந்து, அதை 6 லிட்டர் தண்ணீரில் கலந்தார். இதனை சுந்தரராஜன் மற்றும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன், சந்திரஹாசன், எழில்வாணன், ரவி உள்ளிட்ட 7 பேர் அதை அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் சந்திரஹாசன், எழில்வாணன், மாயகிருஷ்ணன், சுந்தரராஜன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த போது ரத்த வாந்தி எடுத்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்தவர்கள் அதைக் கண்டு உடனடியாக அவர்களை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி முதலில் சந்திரஹாசன் உயிரிழ்ந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேரில் மாயகிருஷ்ணன் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் இன்று (ஏப்.15) புதன்கிழமை இறந்துள்ளனர். எழில்வாணனுக்கு பார்வை பறிபோனதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் புதுச்சத்திரம் போலீஸார், இறந்தவர்கள் மெத்தனால் அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில் மெத்தனால் வாங்கி வந்த குமரேசன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர்கள் தண்ணீரில் கலந்து அருந்தியது தெரியவந்தது. இருப்பினும் வேறு யார் யார் இதுபோன்று மெத்தனால் வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x