Published : 12 Apr 2020 07:47 PM
Last Updated : 12 Apr 2020 07:47 PM
கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு, மற்ற மாநிலங்களில் தரப்படுவதைப் போல் ஹோமியாபதி மருந்தை தமிழகத்திலும் தர வேண்டும் என தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் (ஹோமியோபதி மருத்துவத்துறை), திருப்பூர் மருத்துவர் கிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மத்திய அரசின் ஆயுஷ்துறை, கரோனா வைரஸ் தொற்று ஆளானவர்களுக்கு, ஆர்சினிக்கம் ஆல்பம் (பவர் 30) எனும் ஹோமியோபதி மருந்தை தருவதற்கு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றற்றிக்கை அனுப்பியது. மணிப்பூர், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளாவில் இந்த மருந்தை, மாநில அரசு அளித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் இதனை முன்னெச்சரிக்கையாக தரக்கோரி, மருத்துவர் கிங் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி அவசர வழக்காக தொடுத்தார்.
8-ம் தேதி நடந்த விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவுக்கு, வழக்கு தொடுத்தவர் கருத்துரை அனுப்பலாம் என்றும், உடனடியாக தமிழக அரசும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது.
இது தொடர்பாக மருத்துவர் கிங், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கும் இதனை தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் கிங் 'இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: இங்கிலாந்தின் அரச குடும்பங்களே ஹோமியோபதி மருத்துவத்தை தான் பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு, தற்போது கரோனா வைரஸ் தொற்றுக்காக ஹோமியோபதி மருத்துவத்தை நாடி உள்ளார்.
இந்தியாவில் மத்திய, மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஹோமியோபதி மருந்து, உடலின் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும். சிறந்த நோய் தடுப்பு மருந்து இது. அரசுக்கும் செலவு மிகக் மிக குறைவு. பின்விளைவுகள் இல்லாத இந்த மருந்தை, மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் உடனடி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT