Published : 09 Apr 2020 07:09 PM
Last Updated : 09 Apr 2020 07:09 PM
ஊரடங்கு சமயத்தில் மணப்பாறையில் கர்ப்பிணியின் பிரசவ சிகிச்சைக்காக ரத்த தானம் செய்த காவலரை எஸ்.பி. ஜியாவுல் ஹக் பாராட்டினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிபவர் சையது அபுதாஹீர். கடந்த 6-ம் தேதி மணப்பாறை காமராஜர் சிலை அருகே செக்போஸ்ட் பணியில் இருந்தபோது, அவ்வழியாக நடந்து வந்த நிறைமாதக் கர்ப்பிணியான ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுலோச்சனா (25), அவரது கணவர் ஏழுமலை ஆகியோரிடம் சையது அபுதாஹீர் விசாரித்தார்.
அப்போது, பிரசவ சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகவும், 'ஓ பாசிட்டிவ்' ரத்தம் கிடைக்காததால் பிரசவ சிகிச்சைக்குச் சேர முடியாமல் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட அந்தக் காவலர், தனது ரத்த வகையும் 'ஓ பாசிட்டிவ்' எனக்கூறியதுடன், உடனடியாக அத்தம்பதியருடன் மருத்துவமனைக்குச் சென்று ரத்த தானம் செய்தார். அதன் மூலம் சுலோச்சனாவுக்கு பிரசவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பெண் குழந்தை பிறந்தது. தாய்-சேய் இருவரும் நலமாக உள்ளனர்.
மனிதநேயமிக்க இச்செயலை அறிந்த எஸ்.பி. ஜியாவுல் ஹக் ரத்த தானம் செய்த காவலர் அபுதாஹீரை இன்று (ஏப்.9) நேரில் வரவழைத்துப் பாராட்டினார். மேலும் அவருக்கு வெகுமதி அளித்து ஊக்கப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT