Published : 08 Apr 2020 12:40 PM
Last Updated : 08 Apr 2020 12:40 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பசுமைக்குடில் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சாம்பார் வெள்ளரிக்காயை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் நாள்தோறும் காய்களைப் பறித்துக் கீழே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நுற்றுக்கணக்கான பசுமை குடில்களில் சாம்பார் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வெள்ளரிக்காய் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.
நாள்தோறும் பறிக்கப்படும் 100 டன் அளவிலான சாம்பார் வெள்ளரிக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக கடந்த 12 நாட்களாக கேரளாவுக்கு சாம்பார் வெள்ளரிகாயை அனுப்ப முடியவில்லை. தற்போது வெள்ளரிக்காய் சீசன் என்பதால் செடிகளில் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன.
இந்தக் காய்களை விற்பனைக்கு அனுப்ப வாகன போக்குவரத்து, மார்க்கெட் இல்லாததால் விவசாயிகள் காய்களைப் பறித்து கீழே போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காய்களைப் பறிக்காவிட்டால் கொடி காய்களின் எடைதாங்காமல் முறிந்து அழிந்துவிடும் என்ற காரணத்தால் விவசாயிகள் வேறு வழியில்லாமல் காய்களை பறித்து வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ. 50 வரை விற்பனையான சாம்பார் வெள்ளரி தற்போது கேட்பதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது.
இதனால் தங்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெள்ளரி விவசாயிகள் கூறுகின்றனர். மாநில அரசு உடனடியாக தலையிட்டு சாம்பார் வெள்ளரிக் காய்களை கேரளாவுக்கு அனுப்புவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT