Published : 21 Aug 2015 12:40 PM
Last Updated : 21 Aug 2015 12:40 PM
இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடந்து முடிந்த இலங்கைப் பொதுத்தேர்தல் ஜனநாயக நெறிமுறையில் அமைதியாக, சுமூகமாக நிறைவு பெற்றதற்கு எனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவுக்கும், பிரதமராகத் தேர்வு பெற்ற ரணில்விக்ரமசிங்கேவுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளார்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழர்கள் தந்த தாக்கம் இத்தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது என்று உலக ஊடகங்கள் தெரிவித்திருக்கும் செய்தியை இலங்கை அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்திய வரிகள் ஜனநாயக மகுடத்தில் வைரவரிகள்.
"சர்வதேச அளவில் இலங்கையை உயர்த்துவதற்கு நாம் பாடுபடுவோம். நமக்கு முன்பு இருக்கும் சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைய வேண்டும்" என்று இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
“நமக்கு முன்பு இருக்கும் சவால்” என்று அவர் குறிப்பிட்டது கடந்த பல ஆண்டுகளாக இருளடைந்து கிடக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், சம அரசியல் வாய்ப்பும், சமூக அந்தஸ்தும் உள்ளடங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் மீட்சிதான் என்பதனை உலகறியும்.
இந்நிலையில் தமிழர் பகுதி தொகுதிகளில் மகத்தான வெற்றியைக் குவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையின் எதிர்ப்போடு இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளித்திருப்பது அந்நாட்டு அரசை தன்வயமாக்கவும், தமிழர் நலனை வலியுறுத்துவதற்குமான நல்ல நிலைப்பாடாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இத்தருணத்தில் இலங்கை தேர்தல் குறித்து வாழ்த்து தெரிவித்த கருத்து, இலங்கை தமிழர்களின் விடியலுக்கு விடுக்கப்பட்ட நல்ல செய்தியாக உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக நலிவடைந்து தவிக்கும் இலங்கை தமிழ்ச் சமுதாயம் அனைத்து வேதனைகள், சோதனைகளிலிருந்தும் மீண்டெழுந்து நலம் கண்டு மகிழ புதிய அரசு உரிய சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள். புதிய அரசுக்கு என் வாழ்த்துகள்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT