Published : 07 Apr 2020 02:38 PM
Last Updated : 07 Apr 2020 02:38 PM
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், பேட்டை காதர்முகைதீன் பள்ளிவாசல் தெருப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், அங்கு தினமும் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளருக்கு இன்று சால்வை, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து, கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது.
பொதுமக்கள் வீட்டில் குடும்பத்துடன் இருக்கும் நிலையில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள் கூட இப்போது அவர்களைக் கடவுளாக பார்க்கின்றனர்.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை மனமுவந்து கவுரவிக்கும் சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், கடையநல்லூர், பேட்டை காதர்முகைதீன் பள்ளிவாசல் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர், அங்கு தினமும் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளருக்கு இன்று சால்வை, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து, கை தட்டி உற்சாகப்படுத்தினர்.
கடையநல்லூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றும் சுரேஷ் (27), தினமும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருபவர். இன்று காலையும் வழக்கம்போல் தனது பணியில் ஈடுபட்டார்.
கடையநல்லூர், பேட்டை, காதர்முகைதீன் பள்ளிவாசல் தெருவில் வீடு வீடாகச் சென்று, குப்பைகளை சேகரித்து, தள்ளுவண்டியில் கொட்டினார். அப்போது, அந்த பகுதியச் சேர்ந்தவர்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க தயாராக காத்திருந்தனர்.
ஆனால், அதை அறியாத சுரேஷ், தனது கடமையில் கண்ணாக இருந்தார். பணியை முடித்து, புறப்பட ஆயத்தமானபோது, அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
பின்னர், 100 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிவித்து, கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த திடீர் பாராட்டால், நெகிழ்ச்சியடைந்த சுரேஷ், அப்பகுதி பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “தூய்மைப் பணியாளர் சுரேஷ் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியவர். க
ரோனா தொற்று பரவி பரும் நிலையில் சுறுசுறுப்பாக பணியாற்றும் அவரை கவுரவிக்க வேண்டும் என்று எங்கள் பகுதி மக்கள் அனைவரும் விரும்பினர்.
அதற்கு தங்களால் ஆன பண உதவியை கொடுத்தனர். சிறிது நேரத்தில் 2500 ரூபாய் வரை சேர்ந்தது. அந்த பணத்தைக் கொண்டு ஒரு சால்வை வாங்கி, மீதி இருந்த பணத்தை மாலையாக கோர்த்தோம். எங்கள் பகுதிக்கு இன்று காலையில் வந்து பணியை முடித்து புறப்பட்டபோது, சால்வை அணிவித்து, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தோம்.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க அர்ப்பணிப்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விளக்கேற்றி, கை தட்டினால் மட்டும் போதாது.
நமது நன்றி அவர்களைs சென்றடைய வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் ஒருமனதாக முடிவு செய்து, தூய்மைப் பணியாளரை கவுரவித்தோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT