Published : 24 Aug 2015 02:21 PM
Last Updated : 24 Aug 2015 02:21 PM
பெண்ணை அடித்து மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை மேலாளர் நாராயணன் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சென்னை அசோக்நகர் பிடிசி குடியிருப்பைச் சேர்ந்த ஆர்.வளர்மதி, மாநகர காவல் ஆணை யரிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் ஓர் அங்கமான தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 24 ஆண்டுகள் தொலைபேசி உதவி யாளராக பணிபுரிந்தேன். அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு விடுவதில் பொய் கணக்கு எழுதி லட்சக்கணக் கான பணத்தை இளங்கோவனும், அறக்கட்டளை மேலாளர் நாராயணனும் அபகரித்து வருகின்றனர். இதுகுறித்து கேட்ட தால் என்னைத் தாக்கினர். அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டவும் செய்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், எனது உயிருக்கும் உடமைக்கும் பாது காப்பு அளிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
காவல் ஆணையர் உத்தரவின்பேரில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நாராயணனும் மனுதாக்கல் செய்தனர். அதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி வைத்தியநாதன் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், முன்ஜாமீன் மனுக்கள் நேற்று விசா ரணைக்கு வந்தன. இளங்கோவன் சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதிடும்போது, ‘‘வளர்மதியை பணி நீக்கம் செய்து 7 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என்றார்.
அரசு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, ‘‘மனு தாரர்கள் வளர்மதியை மிரட்டி யதால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்காமல் வீட்டிலேயே அவர் முடங்கியுள்ளார். இந்நிலையில், மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் அளித்தால் சாட்சியத்தை கலைக் கக்கூடும். எனவே, அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது’’ என்றார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரர்களான இளங்கோவன், நாராயணன் இருவரும் மதுரையில் 15 நாட்கள் தங்கியிருந்து அங்குள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT