Published : 06 Apr 2020 04:40 PM
Last Updated : 06 Apr 2020 04:40 PM
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் நிகர வருவாய் ரூ.161.05 கோடியாக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் 2019- 2020-ம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-2020-ம் நிதியாண்டில் 36.08 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது முந்தைய 2018-2019-ம் நிதியாண்டில் கையாளப்பட்ட 34.34 மில்லியன் டன் சரக்குகளை விட 5.05 சதவிகிதம் அதிகமாகும்.
இறக்குமதியை பொருத்தவரையில் 25.82 மில்லியன் டன்களும் (71.57 சதவீதம்), ஏற்றுமதியை பொருத்தவரையில் 10.25 மில்லியன் டன்களும் (28.41 சதவீதம்) கையாளப்பட்டுள்ளது.
சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரை 2019-2020-ம் நிதியாண்டில் 8.03 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய நிதியாண்டில் கையாளப்பட்ட அளவான 7.39 சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 8.72 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019- 2020-ம் நிதியாண்டில் சரக்கு பெட்டகங்கள் 8.72 சதவீதம், தொழிலக கரி 29.54 சதவீதம், கால்நடை தீவனம் 225.40 சதவீதம், கந்தக அமிலம் 79.44 சதவீதம் மற்றும் ராக் பாஸ்பேட் 32.84 சதவீதம் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-2020 நிதியாண்டில் 1,447 கப்பல்களை கையாண்டுள்ளது. இது முந்தைய 2018-2019 நிதியாண்டில் கையாளப்பட்ட 1,370 கப்பல்களை ஒப்பிடுகையில் 5.62 சதவிகிதம் கூடுதலாகும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2019-2020 நிதியாண்டில் இயக்க வருவாய் ரூ.625.08 கோடியாகும். இயக்க உபரி வருவாய் ரூபாய் 375.75 கோடியாகும். 2019-2020 நிதியாண்டில் வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.161.05 கோடியாகும். முந்தைய 2018- 2019-ம் ஆண்டில் நிகர உபரி வருவாய் ரூ.45.13 கோடி மட்டுமே. இந்த ஆண்டு சுமார் மூன்றரை மடங்கு வருவாய் அதிகரித்துள்ளது.
திட்டங்கள்:
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.438.61 கோடி செலவில் சரக்கு தளம் 9-ஐ சரக்குபெட்டக முனையமாக மாற்றும் திட்டம், ரூ.269.06 கோடி செலவில் மொத்த சரக்குகளை கையாளுவதற்கு வடக்கு சரக்கு தளம்-3-ஐ இயந்திரமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோரம்பள்ளம் முதல் துறைமுகம் வரையிலான சாலையை 6-வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ.41.55 கோடியிலும், துறைமுகத்தில் இருந்து வெளி செல்லும் அனைத்து சரக்குபெட்டகங்களையும் கண்காணிக்கும் ஸ்கேனர் அமைக்கும் பணி ரூ.46.25 கோடியிலும் நடைபெற்று வருகிறது.
மேலும், நவீன தீயணைப்பு நிலையம் ரூ.17.49 கோடி செலவிலும், 5 எம்எல்டி உப்பு நீரை நன்னீராக்கும் ஆலை ரூ.143 கோடி செலவிலும் அமைக்கப்படவுள்ளது. துறைமக வளாகத்தில் 140 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் ஆலையும், 5 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலையும் அமைக்கப்பட உள்ளது.
துறைமுக பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க 702 ஏக்கர் நிலப்பகுதியை துறைமுகம் ஒதுக்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக 275 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டதில் 2 நிறுவனங்களுக்கு சமையல் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பதற்கான ஆணைகள் விரைவில் வழங்கபட உள்ளது என, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT