Published : 19 Aug 2015 08:26 AM
Last Updated : 19 Aug 2015 08:26 AM

ரஷ்ய கலாச்சார மையத்தில் அப்துல் கலாமுக்கு நினைவஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் வெவ் வேறு தருணங்களில் தொடர்புடைய பலர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். ரஷ்ய கலாச்சார மையம் சார்பாக இந்நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.

அப்துல் கலாமுடன் 40 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றிய பிரமோஸ் தந்தை என அழைக்கப் படும் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, “அப்துல் கலாம் தலைவர்களை விட நாடுதான் முக்கியம் என்று கூறியவர். எனவே தான், வாஜ்பாய் தலைமையிலான அரசில் அவருக்கு அளித்த அமைச்சர் பதவியை தவிர்த்து விட்டு பொக்ரான் சோதனையில் ஈடுபட்டார். அனைவரிடமும் திறமை இருக்கிறது என்று அவர் தீர்க்கமாக நம்பினார். நாம் இன்று பயன்படுத்தும் ராடார்களில் முக்கிய பொருளான பேஸ் ஷிப்டர் உள்ளது. டெல்லி ஐஐடியில் இருந்த பேராசிரியர் பாரதிபட்டு என்பவர் பேஸ் ஷிப்டர் பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார் என்பதை அறிந்து அவரை கண்டுபிடித்து பேஸ் ஷிப்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தவர் அப்துல் கலாம்” என்றார்.

‘இந்து’என்.ராம் பேசும்போது, “அப்துல் கலாம் மிகவும் வெளிப் படையானவர், கடுமையான உழைப் பாளி. இந்தியாவின் சொந்த விண்வெளி ஆராய்ச்சி தொழில் நுட்பங்களை உருவாக்குவதில் அவரது பங்கு அபாரமானது” என்றார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பேசும்போது, “எனது தந்தையின் சுய சரிதையை படித்து விட்டு அப்துல் கலாம் பாராட்டி எழுதிய கடிதத்தில் அவருக்கு பிடித்த ‘திருப்பதி கணேசா கோவிந்தா’ என்ற அத்தியாயத்தை குறிப்பிட்டிருந்தார்” என்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் வருகை புரிந்து நகர்ப்புற கட்டமைப்புகளை கிராமப்புற மக்களுக்கு வழங்குவதற்கான புரா திட்டத்தை பார்வையிட்டது குறித்து பல்கலைகழகத்தின் வேந்தர் கி.வீரமணி நினைவுகூர்ந்தார்.

அப்துல் கலாம் பல்வேறு தலைவர்களுடன் இருந்த முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக ரஷ்ய கலாச்சார மையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ரஷ்ய துணை தூதர் டாக்டர் செர்ஜி எல்.கொதோவ், புதிய பார்வை இதழின் ஆசிரியர் எம்.நடராஜன், இந்திய ரஷ்ய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளை எழுதிய பிரமோஸ்-ன் வெற்றி மந்திரம் என்ற ஆங்கில நூலுக்கு அப்துல் கலாம் முன் னுரை எழுதியிருந்தார். இந்நூல், பிரமோஸ் என்ற இந்திய சாதனையை இந்திய மக்கள் அனை வரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய மொழிகளில் மொழிபெயர்க் கப்படவுள்ளது. முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்படுகிறது” என்று சிவதாணு பிள்ளை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x