Last Updated : 04 Apr, 2020 04:30 PM

 

Published : 04 Apr 2020 04:30 PM
Last Updated : 04 Apr 2020 04:30 PM

நிறைமாத கர்ப்பிணிக்கு உதவிய சிவகங்கை போக்குவரத்து இன்ஸ்பெக்டர்: ஆதரவற்றோர் 100 பேருக்கு தினமும் உணவு வழங்கும் போலீஸ் அதிகாரி- குவியும் பாராட்டுகள்

சிவகங்கையில் இருந்து நடந்தே ஊருக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணியை தனது வாகனத்தில் இறக்கிவிட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி.

சிவகங்கை

சிவகங்கையில் இருந்து நடந்தே ஊருக்குத் திரும்பிய சிங்கம்புணரியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உதவி செய்தார்.

அதேபோல் 100 ஆதரவற்றோருக்கு தேவகோட்டை இன்ஸ்பெக்டர் சொந்த செலவில் தினமும் உணவு வழங்கி வருகிறார். அவரைப் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

சிங்கம்புணரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெள்ளையன் (30). நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி கவுசல்யாவை (25) பிரசவத்திற்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் சென்றார். சில காரணங்களுக்காக அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஏப்.12-ம் தேதி தான் குழந்தை பிறக்கும். இதனால் வீட்டிற்குச் செல்லுமாறு கூறி கவுசல்யாவை திருப்பி அனுப்பினர்.

ஆனால் ஊரடங்கு உத்தரவால் சிவகங்கையில் இருந்து சிங்கம்புணரிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் நிறைமாத கர்ப்பிணியான கவுசல்யாவும், அவரது கணவரும் நடந்தே சிங்கம்புணரிக்கு சென்றனர்.

சிவகங்கை மதுரைமுக்கு பகுதியில் சென்ற அவர்களிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி விசாரித்தார். அவரிடம், நடந்தே சிங்கம்புணரிக்கு செல்வதாக கவுசல்யா தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களை இன்ஸ்பெக்டர் மணி, தனது வாகனத்தில் ஏற்றி திருக்கோஷ்டியூர் அருகே அரளிக்கோட்டையில் இறக்கிவிட்டார்.

பணி நேரத்தில் காவல் எல்லையை தாண்டிச் செல்ல கூடாது என்பதால் அரளிக்கோட்டையில் இருந்து வேறு வாகனம் மூலம் சிங்கம்புணரிக்கு நிறைமாத கர்ப்பிணியையும், அவரது கணவரையும் அனுப்பி வைத்தார்.

தேவகோட்டை பகுதியில் ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்ற, வீடுகளற்ற 100-க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வந்தனர்.

அவர்களுக்கு தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை, தனது சொந்த செலவில் சக போலீஸார் உதவியோடு உணவு தயாரித்து தினமும் வழங்கி வருகிறார்.

மேலும் அவர்களுக்கு தண்ணீர் பாடில்கள், படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு பண உதவி போன்றவையும் செய்து வருகிறார்.

இந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x