Published : 03 Apr 2020 01:57 PM
Last Updated : 03 Apr 2020 01:57 PM

அதிவேகமாக சோதனை முடிவுகளை அறியும் கருவிகளை வாங்க அரசிடம் நிதியில்லை என்றால் மக்களிடம் மடியேந்தி பிச்சை எடுக்கவும் தயார்: கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி பேட்டி

திண்டுக்கல்

"தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிய அதிவேகமாக சோதனை முடிவுகள் தெரியவரும் கருவிகளை வாங்கவேண்டும். இதற்காக எனது எம்.பி.,தொகுதி நிதியை முழுமையாக வழங்க உள்ளேன். தமிழக அரசிடம் நிதியில்லை என்றால் மக்களிடம் மடியேந்தி பிச்சைஎடுக்கவும் தயாராக உள்ளேன்" என கரூர் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கரூர் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு நடத்திவருகிறேன்.

டாக்டர்கள், மாவட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடன் பேசி அவர்களுக்கு தேவையான உதவிகளைக் கேட்டறிந்தேன். எம்.பி.,நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கினேன். அடுத்தகட்டமாக 57 லட்சம் நிதிஒதுக்கியுள்ளேன். மொத்த எம்.பி., நிதியையும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு தர தயாராக உள்ளேன்.

கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 17 வெண்டிலேட்டர்கள் வழங்கியுள்ளேன். வேடசந்தூர் மருத்துவமனையில்வெண்டிலேட்டர் வசதி கிடையாது.

இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்து திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பிவைக்கமுடியும்.

சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரூ.2.50 லட்சம் வேடசந்தூர் காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு மகளாக, சகோதரியாக வேடசந்தூர் தொகுதி மக்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாரும் வீட்டைவிட்டு வெளியேவரவேண்டாம். பதட்டப்படவேண்டாம். வீட்டிற்குள் இருப்பது தான் பாதுகாப்பு.

வதந்திகளை நம்பவேண்டாம். கரோனா வைரஸ் தொற்றை தடுக்க களத்தில் நின்று பணியாற்றிவருகிறோம். களத்தில் நிற்கும் அனைருக்கும் உறுதுணையாக இருக்கிறோம்.

நெருக்கடியான நிலையில் அரசியலுக்கு அப்பாற்றபட்டு தமிழக அரசுடன் நிற்கிறோம்.

மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். முடிவுகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக அறிவிக்கவேண்டும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அதிவிரைவாக பரிசோதனை செய்யும் இயந்திரத்தை வாங்கியுள்ளனர். இதேபோல் தமிழக அரசு இயந்திரங்களை வாங்கவேண்டும்.

இதற்கு எனது எம்.பி.,தொகுதியில் வழங்கப்பட்ட அனைத்து பணிகளையும் ரத்துசெய்துவிட்டு நிதி முழுமையாக ஒதுக்க தயாராக உள்ளேன். நிதியில்லை என்றால் மடியேந்தி பிச்சை எடுக்கவும்தயாராக உள்ளேன்.

தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் நிதிக்கான டோக்கன் அதிமுக செயலாளர்கள் வீட்டில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் அங்கு கூட்டம் கூடுகிறது. இதைதவிர்த்து ரேஷன் கடைபணியாளர்கள் தான் டோக்கன், ரூபாய் வழங்கவேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது.

மருத்துவபணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர் பலர் முகக்கவசம் இல்லாமல் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்யவேண்டும்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை. பிரதமரிடம் இருந்து இந்த நாடு எதிர்பார்ப்பது கரோனா தொற்றை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகள் தான். அதைவிட்டுவிட்டு விளக்கை அணைக்கவும், ஏற்றவும் சொல்ல ஒரு பிரதமர் தேவையில்லை, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x