Published : 01 Apr 2020 02:55 PM
Last Updated : 01 Apr 2020 02:55 PM
மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைக் குற்றாலத்தில் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்த துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கரோனா அச்சத்தால் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் சிலருக்கு கரோனா வைரஸ் தாக்கியது தெரிவந்தது.
இந்த மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்று வீடு திரும்பியுள்ளனர். அவர்களைக்க் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வடகரை, மேலகரம் பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று, திரும்பி வந்தது தெரியவந்தது. இவர்கள் அடையாளம் காணப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களுக்கு கரோனா அறிகுறி ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், பாதுகாப்பு கருதி, அவர்களை மேலகரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனித்தனி அறைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர்.
இதற்கு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால், தனிமைப்படுப்பட்டவர்கள் வெளியே வந்தால், தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் அவர்கள் 8 பேரும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு, அந்த விடுதிக்கு அருகில் உள்ள துப்புரவுப் பணியாளர் குடியிருப்பில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களால் தங்களுக்கும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாகக் கூறியும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றக் கோரியும் துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
மேலும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எதிர்ப்பு காரணமாக, வேறு இடம் தேடும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அந்த 8 பேரின் குடும்பத்தினரையும் 2 வாரம் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து மத பிரச்சாரத்துக்காக வந்து, வல்லத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் தங்கியிருந்த 12 பேரை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து, செங்கோட்டையில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, அனைவரும் தனித்தனி அறைகளில் தங்க வைத்து, தனிமைப்படுத்தினர்.
இந்நிலையில், இவர்களும் டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என்று தற்போது தெரியவந்தது. இவர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களையும் சேர்த்து டெல்லியில் நடந்த தப்ளிக் மாநாட்டில் பங்கேற்ற 20 பேர் தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT