Published : 27 Mar 2020 07:04 AM
Last Updated : 27 Mar 2020 07:04 AM
காஞ்சிபுரம்/செங்கல்பட்டு/ திருவள்ளூர்
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி தகுந்தகாரணம் இன்றி சாலையில் சுற்றித்திரிந்த நபர்களின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றுதிரும்பியதாக 556 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது446 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த 120 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பல்லாவரம் அருகே கீழ்கட்டளையைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று, அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டி, வீட்டில் தனித்து இருக்குமாறும் வெளியில் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் காரணங்கள் இன்றிசாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
10 பேர் மீது வழக்கு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 23இடங்களில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து யாரும் உள்ளே அனு மதிக்கப்படவில்லை. இதேபோல் நகரின் நுழைவு வாயிலிலும் சோதனைச் சாவடி அமைத்து போலீஸார் கண்காணித்து வருகினறனர். அதிக மக்கள் வரும் மார்கெட் போன்ற இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து கூட்டம் சேராதவாறு தடுத்து வருகின்றனர்.
தடை உத்தரவை மீறி பல இளைஞர்கள் காஞ்சிபுரம் பகுதியில் சுற்றி வந்தனர். இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி செயல்பட்டதாக 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு வரக்கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தோர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தோர் என 180 பேரை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவர்களின் வீடுகளிலும்,வீடு இல்லாத சுற்றுலா பயணிகள்தனி முகாம்களிலும் வைத்துகண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முகக்கவசம் வழங்கிய போலீஸார்
காஞ்சிபுரத்தில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மருந்துக் கடைகள் உட்பட பல இடங்களில் முகக்கவசம் கிடைக்கவில்லை. இந்நிலையில் முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் முகக்கவசம் வழங்கி, உரிய அறிவுரைகளை கூறி அனுப்பினர். மருந்துக் கடைகளில் முகக்கவசம் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
ஊர் திரும்பும் தொழிலாளர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் 1,050 போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை முதல் மதியம் வரை, தேவையில்லாமல் சாலையில்சென்ற 64 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், வீணாக சாலை மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரிந்ததாக 76 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
முகப்பேர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநில தொழிலாளர்கள் 100-க்கும்மேற்பட்டோர் நேற்று குழு குழுவாக, ஆந்திரா நோக்கி புழல், செங்குன்றம் வழியாக சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றதை காண முடிந்தது. மேலும், திருவள்ளூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் தங்கி தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வடமாநிலதொழிலாளர்கள் 15 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்களை சமூகநலக் கூடத்தில் தங்க வைத்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படும் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.ஆனால், பொதுமக்களை நம்பியுள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்படவில்லை. தடை உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, அனைத்து முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கும் உதவித்தொகை வழங்குவதாக முதல்வர் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முடித்திருத்தும் தொழிலாளர் சங்கம் சாா்பில் ஓருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ருக்மாங்கதன் கோாிக்கை விடுத்துள்ளார். மேலும், மின்சாரக் கட்டணம், வங்கிக் கடன் ஆகியவற்றை செலுத்த தமிழக அரசு கால அவகாசம் பெற்றுத் தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT