Published : 25 Mar 2020 05:18 PM
Last Updated : 25 Mar 2020 05:18 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் இருசக்கரவாகனத்தில் வலம் வந்தனர். போலீஸார் அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது.
ஆனாலும், இன்று காலையில் வழக்கம்போல் பலர் தங்கள் இருசக்கரவாகனங்களை எடுத்துக்கொண்டு திண்டுக்கல், பழநி நகர வீதிகளில் மக்கள் வலம் வந்தனர். மக்கள் நடமாட்டம் இன்று காலையில் நகர்பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டது.
இறைச்சிக்கடைகளில் 10 க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். காய்கறி மார்க்கெட்களிலும் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட கிராமப்பகுதிகளில் போக்குவரத்து மட்டுமே இல்லை. மற்றபடி மக்கள் தங்கள் இயல்புவாழ்க்கையை தொடர்ந்தனர்.
அரசு எதிர்பார்த்தபடி திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லை என்ற நிலையே இன்று நிலவியது. இதையடுத்து இன்று பகலில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரி அருகேயுள்ள சாலை சந்திப்பைக் கடந்த 50- க்கும் மேற்பட்ட இருசக்கரவாகனங்களை போலீஸார் நிறுத்தினர்.
இவர்களை 15 நிமிடங்களுக்கு மேலாக காக்கவைத்தனர். தொடர்ந்து உங்கள் நலன், ஊரின் நலன், நாட்டின் நலனுக்காக அரசின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இனிமேல் வெளியில் நடமாட்டம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் அனுப்பினர். இதனால் நேற்று மாலையில் திண்டுக்கல் நகர் பகுதியில் இருசக்கரவாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கைவிடுத்தவண்ணம் இருந்தனர்.
கொடைக்கானல் மக்கள் ஒத்துழைப்பு:
கொடைக்கானல் நகர்பகுதியில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளின் குறுக்கே தடுப்புகள் அமைத்து வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடுக்கப்பட்டது.
ஆனால் இளைஞர்கள் சிலர் குழுக்களாக கிரிக்கெட் விளையாடுவது, ஒன்றாக சுற்றுவது என அரசின் உத்தரவை கடைப்பிடிக்காதவகையில் செயல்பட்டனர். இது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. மதுபாட்டில்களை சிலர் வீடுகளில் வைத்து விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கொடைக்கானல் மலைகிராமப்பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர் கிராமங்களில் வழக்கமான பணிகளில் மக்கள் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் ஏரிச்சாலை உள்ளிட்ட பொதுஇடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரி அருகே இருசக்கரவாகனங்களில் சென்றவர்களை நிறுத்தி எச்சரித்த போலீஸார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT