Published : 23 Mar 2020 08:41 PM
Last Updated : 23 Mar 2020 08:41 PM
கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன. மத்திய அரசிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. ஈரோடு மாவட்டத்தை தனிமைப்படுத்துவது தொடர்பாக இதுவரை எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை.
பொதுமக்களைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் இருந்து மார்ச் 1ம்தேதிக்கு பிறகு யார் வந்திருந்தாலும், அவர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டுகிறோம். அவ்வாறு தகவல் கொடுத்தால், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியும். இந்த தகவலை யாரும் மறைக்கக் கூடாது. இதற்காக கிராம அளவில் தொடங்கி பல்வேறு குழுக்களை அமைத்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அவர்களில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 உறுப்பினர்களை அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளோம். இவர்களின் வீடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. வெளியில் இருந்து யாரும் அப்பகுதிக்குச் செல்லக் கூடாது. அதே நேரத்தில் அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அடிப்படைத் தேவையை அப்பகுதியிலேயே நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வெளிமக்களோடு பழகக் கூடாது. எதிர்வரும் 15 நாட்கள் மிக சவாலான காலமாகும். அதற்கு பொதுமக்கள், ஊடகம் என அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT