Published : 18 Mar 2020 04:56 PM
Last Updated : 18 Mar 2020 04:56 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பட்டாசு ஆலைகளில் 50 பேருக்கு மேல் பணியாற்றக் கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 100-க்கு மேற்பட்டோர் பங்கேற்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக திருமண மண்டபம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், வாடகை கார் உரிமையாளர்கள், வர்த்தகம், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கங்கள், அனைத்து மத வழிப்பாட்டு பிரதிநிதிகள் ஆகியோருடன்ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பருமாள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பேசுகையில், திருமண மண்டபங்களில் முன்னதாக பதிவுசெய்யப்பட்ட திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் தவிர்த்து புதியதாக எவ்வித நிகழ்ச்சிகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருப்பினும் அதிகமான மக்கள் 100 நபர்களுக்கு மேல் வராமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மண்டப வாயிலில் விழிப்புணா்வு வாசகங்களுடன் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
தனியார் வாடகை கார், வேன் உர்மையாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு சுற்றுலாவுற்காக செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
தவிர்க்க இயலாத நேரங்களில் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் தகவல் அளிக்கவேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்கப்படுவதற்கு முன்பு முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்து இயக்கவேண்டும். மறுமார்க்கத்திலும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கவேண்டும்.
மாவட்டத்தில் 50 தொழிலாளர்களுக்கு மேல் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இம்மாத இறுதிவரை குறைத்துக்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலைகளில் 50 பேருக்கு மேல் பணியாற்ற அனுமதி இல்லை. தேர்வு காரணமாக விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து தரப்படவேண்டும். விடுமுறைக்கு பின்னர் வரும் மாணவர்களை முறையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கவேண்டும்.
மார்ச் 31 வரை மாவட்டத்தில் கோயில் திருவிழா, பூக்குழி இறங்குதல் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்படுகிறது.
மசூதிகளில் வெள்ளி கிழமைகளில் நடைபெறும் தொழுகையின்போது, அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதே போல, கிருஸ்துவ தேவாலயங்களில் ஞாயிறு அன்று நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சியிலும் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT