Published : 18 Mar 2020 01:20 PM
Last Updated : 18 Mar 2020 01:20 PM
உலக நாடுகளை முடக்கிவைத்திருக்கும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. ஆனால், எந்த ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமும் அடிமட்டத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டால் அதன் வீச்சு வேறு.
அதை நிரூபிக்கும் வரையில், தண்டோரா போட்டு கிராம மக்களிடம் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஊராட்சித் தலைவர் ஒருவர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்- 19 இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இம்மாதம் 31-ம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு மருத்துவ மற்றும் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், போஸ்டர்கள் ஒட்டுதல், தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடுதல், பொதுமக்கள் தங்கள் கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுவது அவசியம் குறித்தும் காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறக் கோரியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் கோவிட்- 19 வைரஸ் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரலொட்டி கிராமத்தில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவருகிறார் ஊராட்சி தலைவர் திருப்பதி.
இதுகுறித்து அவர் கூறுகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கிராமப்பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்டோரா போட்டு மக்களிடம் நேரடியாகச் சென்று பாதுகாப்பு முறைகள் மற்றும் வைரஸ் நோய் தடுப்பு குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT