Published : 17 Mar 2020 07:57 AM
Last Updated : 17 Mar 2020 07:57 AM
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் விதமாக, ஊரின் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை, தண்ணீர் குழாய் அமைத்து, கைகளைக் கழுவுவதற்காக சோப்பும் வைத்துள்ள ஊராட்சித் தலைவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சீனாவைத் தொடர்ந்து உலக அளவில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. வெளியில் பொது இடங்களுக்குச் சென்றுவருவோர் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்விதமாக, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என மாநில சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதைப் பின்பற்றி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பேராவூரணி அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள செந்தலைவயல் ஊராட்சித் தலைவர் ரகமத்துல்லா(50), ஊரின் நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், கோவிட்-19 வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்து உள்ளார். அதன் அருகில் 3 தண்ணீர்க் குழாய்களை அமைத்து, கை கழுவுவதற்காக சோப்பு மற்றும் டெட்டால் கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து ரகமத்துல்லா கூறியதாவது:
எங்கள் ஊரில் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நாமும் நம்மாலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், எங்கள் கிராமத்துக்கு வெளியூரில் இருந்து வருபவர்களும், இங்கிருந்து வெளியூர் செல்பவர்களும் கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளையும், கால்களையும் கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
அதற்காக தண்ணீர், சோப்பு ஆகியவற்றையும் ஊரின் நுழைவு வாயிலில் வைத்துள்ளேன். இந்த நடவடிக்கைக்கு, கிராம மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT