Published : 12 Mar 2020 06:30 PM
Last Updated : 12 Mar 2020 06:30 PM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கோவிட் 19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் கோயில்கள், ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தைகளில் கிருமி நாசனி தெளிக்கும் பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கோவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்தில் தென்காசியில் திருக்கோயில்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
தென்காசி நகர் அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு ..பருந்திநின்ற பெருமாள் திருக்கோயில் மற்றும் கீழப்பாவூர் அருள்மிகு நரசிங்க பெருமாள் திருக்கோயில்களில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோரின் உத்தரவின்படி தமிழக அரசின் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் வரும் பகுதிகளிளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்பணிகளை அறநிலையத்துறை கண்காணிப்பாளர் கவிதா, திருக்கோயில் செயல்அலுவலர் ராம்ராஜ் உள்ளிட்டோர் கண்காணித்தனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ..தடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
துபாயிலிருந்து கடையநல்லூருக்கு திரும்பிய இளைஞருக்கு கோவிட் 19 வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்ததை அடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தேனியிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் கூறும்போது, இம்மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் அந்த இளைஞரின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனை செய்ததில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அவருக்கு இன்று காய்ச்சல் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார். தேனிக்கு அனுப்பியுள்ள ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
அதிலும் கோவிட் 19 வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானால் அந்த இளைஞர் சாதாரண காய்ச்சல் வார்டுக்கு அனுமதிக்கப்படுவார். பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT