Published : 10 Mar 2020 03:42 PM 
 Last Updated : 10 Mar 2020 03:42 PM
தனது கோரிக்கைகளை மூன்று மாதங்களில் நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என, புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர் தின விழா இன்று (மார்ச் 10) தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:
"உலகில் உள்ள அனைத்துப் பெண்களும் திறமைகளை வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை. 90 சதவீதத்துக்கு மேலான பெண்களிடம் திறமை உள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க பிரதமரிடம் துணைநிலை ஆளுநர் கோரிக்கை வைத்து பெற்றுத் தர வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் நான் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால் நானும், முதல்வரும் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நடைமுறைக்கு வராது. துணைநிலை ஆளுநர்தான் சொல்ல வேண்டும். 2 ஆண்டுகளாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவில்லை.
இதற்கு நானோ, முதல்வரோ, ஆளுநரோ, தலைமைச் செயலாளரோ காரணம் இல்லை. நிதிச் செயலாளர்தான் அங்கன்வாடி ஊழியர்களுக்கு போனஸ் தேவையில்லை என்று எழுதிவிட்டார். தற்போது அரசுத் துறைகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதை துணைநிலை ஆளுநர்தான் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 100 பேர் பணிபுரியக்கூடிய இடங்களில் 500 பேர் வரை அப்போதைய முதல்வர் ரங்கசாமி பணியமர்த்திவிட்டார். அப்போது மத்திய அரசிடம் நிதி பெற முடிந்தது. மேலும் நிதியை ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்ற முடிந்தது. இதனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது அதுபோல் செய்ய முடியவில்லை. இதனால் 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஊதியமும், வேலையும் இல்லாமல் உள்ளனர். ஆளுநர் திறமையும், உறுதியும் மிக்கவர்தான். அதுபோல் முதல்வரும் மத்தியில் 23 ஆண்டு காலம் இருந்துள்ளார். 2 முறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். எங்கோ ஒரு இடத்தில் தவறு நடக்கிறது. இதனால் ஆளுநரும், முதல்வரும் குறைகளையே கூறி வருகின்றனர். இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
பாப்ஸ்கோ, கான்பெட், கூட்டுறவு சர்க்கரை ஆலை, ரோடியர், பாரதி, சுதேசி மில் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை. இவற்றில் பெரும்பாலானவை எனது துறையின் கீழே வருகின்றது. அங்கன்வாடியில் காலியாக உள்ள இடங்களை கடந்த 4 ஆண்டுகளாக நிரப்ப முடியவில்லை.
வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். துணைநிலை ஆளுநரும் காவல்துறையில் சிறந்த அதிகாரியாகச் செயல்பட்டவர்தான். நிதியில்லாததால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, ஆளுநர் மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற்றுத்தந்து, திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்.
முதல்வர் அரிசி வழங்க நினைத்தார். ஆளுநர் பணம்தான் வழங்க வேண்டும் என்றார். நீதிமன்றம் பணம் வழங்க தீர்ப்பு அளித்துள்ளது. எனவே 23 மாத இலவச அரிசிக்கான பணத்தை ஆளுநரும், முதல்வரும் தர வேண்டும். எனது பல கோரிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு அமைத்துத் தீர்க்க வேண்டும்.
3 மாதங்களில் எனது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து, மக்களுடன் மக்களாக சேர்ந்து போராட்டம் நடத்துவேன். திட்டங்களைத் தர முடியாததும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தராததும் வருத்தமாக உள்ளது. எனது துறைகள் பின்தங்கியுள்ளன. எனவே, துணைநிலை ஆளுநர் இவ்விஷயத்தில் தலையிட்டு மத்திய அரசிடம் நிதியைப் பெற்று, திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன்"
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
உரையை முடித்த பின்னர் அமைச்சர் கந்தசாமி தனது கோரிக்கை மனுவை விழா மேடையிலேயே துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT