Published : 08 Mar 2020 10:33 AM
Last Updated : 08 Mar 2020 10:33 AM
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக திருவாரூரில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டத்தை வழங்கி விவசாயிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்துக்கு எதிரான திட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களை காக்கும் விதமாக, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியதற்காக பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
அதன்படி, காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சார்பில் நன்றி பாராட்டும் விழா திருவாரூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை வகித்தார். தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றார்.
விவசாய சங்கத் தலைவர்கள் பயரி கிருஷ்ணமணி, காவிரி வெ.தனபாலன், நெடுவாசல் சி.வேலு, சிதம்பரம் ரவீந்திரன், செம்மங்குடி மு.ராஜேந்திரன், நாகை ஆர்.பாண்டுரெங்கன், புதுக்கோட்டை ஜி.எஸ்.தனபதி, குடவாசல் க.சேதுராமன், தஞ்சாவூர் சுகுமாறன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக விழா மேடைக்கு தமிழக முதல்வரை மாட்டு வண்டியில் ஏற்றி அழைத்து வந்தனர். விவசாயிகள் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. விவசாயிகள் வழங்கிய பட்டத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் முழங்க, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் ‘வாழ்க வாழ்க’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு நினைவுப் பரிசாக ஏர் கலப்பை வழங்கப்பட்டது. விவசாயிகளின் நன்றி பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டு முதல்வர் பழனிசாமி சிறப்புரையாற்றி னார்.
விழாவில், காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஆர்.துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., முத்துசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT