Published : 03 Mar 2020 07:24 PM
Last Updated : 03 Mar 2020 07:24 PM

குறைந்துவரும் ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம்: திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரத்திற்கு சிக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருவதால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே தேவையான நீரை வழங்கமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் குடிநீர் ஆதராமாக வைகை ஆற்றில் இருந்து நீர் பெறப்படும் பேரணை திட்டம், ஆத்தூர் நீர்த்தேக்கம் ஆகியவை இருந்தது. இதில் ஆத்தூர் நீர்த்தேக்கம் மூலம் போதுமான நீர் கிடைத்ததால் பேரணைத் திட்டத்தை திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் முழுமையாக கைவிட்டது. இதனிடையே திண்டுக்கல் மக்கள் தொகைகணக்கின்படி கூடுதல் நீர் தேவைப்பட்டதால்

காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தும் திட்டம் என்பதால், இதன்மூலம் பெறப்படும் நீருக்கும் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணம் செலுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் தினசரி தேவையான 15 எம்.எல்.டி., தண்ணீர் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் ஆத்தூர் நீர்த்தேக்கம் மூலம் பெறப்படுகிறது.

இதில் ஆத்தூர்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 9 அடியாக உள்ளது(மொத்தம் 23 அடி). ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில், தற்போது கடும் வெயிலின் தாக்கமும் இருப்பதாலும் தினமும் நகரின் குடிநீர் தேவைக்கு 10 எம்.எல்.டி., தண்ணீர் எடுப்பதாலும் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவருகிறது. இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறையக் குறைய நீர் எடுப்பதும் குறையும் என்பதால், காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் நீர் பெறவேண்டிய நிலை உருவாகும்.

தற்போது காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு நத்தம், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளுக்கும் வினியோகம் செய்துவருவதால் கூடுதல் நீரை திண்டுக்கல் நகருக்கு பெறமுடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க வழியில்லாத நிலை உருவாகவுள்ளது. தற்போது திண்டுக்கல் மாநகராட்சியின் ஒரு சில வார்டுகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும் சில வார்டுகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் என்றும், நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்றும் வார்டுவாரியாக குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

ஆத்தூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது 9 அடியாக உள்ளநிலையில் நீர் எடுப்பு, வெயிலின் தாக்கம் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குறைந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளது.

இதற்கிடையில் கோடைமழை ஏதும்பெய்து நீர்மட்டத்தை உயர்த்தினால் தான் உண்டு. இல்லாதபட்சத்தில் திண்டுக்கல் நகரமக்களுக்கு போதுமான குடிநீர் வினியோகம் செய்யமுடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x