Published : 02 Mar 2020 08:21 PM
Last Updated : 02 Mar 2020 08:21 PM
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி அருகே உள்ள தீண்டாமை வேலியை அப்புறப்படுத்த குறைதீர் கூட்டத்தில் பால்வண்ணநாதபுரம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றுது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பாறைப்பட்டி கிராம பொதுமக்கள்.
சிவகிரி வட்டம், பாறைப்பட்டி இந்திரா காலனி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மனு அளிக்க திரண்டு வந்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் பகுதியில் 25 ஆண்டுகளாக குடிநீர்ப் பிரச்சினை உள்ளது. 4 கிலோமீட்டர் தூரம் அலைந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். இதனால், பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம். நாங்கள் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தீண்டாமை வேலியை அகற்றுங்கள்..
திராவிடத் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆதிவீரன் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா பருவக்குடி அருகே உள்ள பால்வண்ணநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அளித்துள்ள மனுவில், ‘நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனி நபர் ஒருவர் வேலி அமைத்து, மறைத்து தீண்டாமையை கடைபிடிக்கிறார். இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடைபாதையை ஆக்கிரமித்தவரிடம் இருந்து பாதையை மீட்டுக் கொடுக்க வேண்டும். பாதையை மீட்டுத் தர முடியாத நிலை ஏற்பட்டால், எங்களை குடும்பத்துடன் கருணைக் கொலை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ரேஷன் கடை தேவை..
சங்கரன்கோவில் வட்டம் பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 150 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊருக்கான ரேஷன் கடை மடத்துப்பட்டி ஊராட்சியில் உள்ளது. அங்கு செல்ல 4 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியது உள்ளது. ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டுமானால் ஒரு நாள் வேலை பாதிக்கப்படுகிறது. எனவே, எங்கள் ஊரிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ரேஷன் கடை கேட்டு மனு அளிக்க வந்த பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.
நதிகள் பாதுகாப்பு சமூகநல இயக்க நிர்வாகிகள் சங்கர், ரவீந்திரன் ஆகியோர் அளித்துள்ள மனவில், ‘தென்காசி மங்கம்மா சாலை சீரமைப்புக்காக ஜல்லிகற்கள் விரித்த நிலையில், சாலை பணி முழுமை பெறாமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆதிசுயம்பு முத்தாரம்மன் கோயில் திதுவிழாவையொட்டி வருகிற 19-ம் தேதி பொங்கலிட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
அகரக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கழக பிரமுகர் லூர்து அளித்துள்ள மனுவில், ‘சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தென்காசி புறவழிச் சாலைத் திட்டத்தில் எந்த பணியும் நடைபெறாமல் உள்ளது. தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்ட பின்னர், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச் சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT