Published : 29 Feb 2020 07:22 AM
Last Updated : 29 Feb 2020 07:22 AM

கடன் தராததால் விபரீத விளையாட்டு; கோழி இறைச்சியில் கரோனா வைரஸ் இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி- நெய்வேலியில் சிறுவன் சிக்கினான்

கடலூர்

இறைச்சிக் கடையில் தனக்கு கடன் தராத ஆத்திரத்தில், கோழி இறைச்சியில் கரோனா வைரஸ் பரவி வருவதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய சிறுவன் போலீஸாரிடம் சிக்கினான்.

நெய்வேலியில் கோழி இறைச்சிக் கடை ஒன்றில், இறைச்சி வாங்கிசாப்பிட்ட ஒருவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு, என்எல்சிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், அவர் கூடுதல்சிகிச்சைக்காக கடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு கரோனா வைரஸ் தொற்றி, அவர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த இரு நாட்களாக வாட்ஸ் அப்பில் தகவல் வைரலாக பரவி வந்தது.

குறிப்பிட்ட இறைச்சிக் கடையின் பெயரும் அந்த போலித் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போலித் தகவல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக பகிரப்பட, மக்கள் மத்தியில் பீதி கிளம்பியது.

இந்தத் தகவலால் மன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இறைச்சிக் கடை உரிமையாளர் நெய்வேலி தெர்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நெய்வேலி வட்டம்21-ஐ சேர்ந்த 17 வயதுடைய சிறுவன், இந்த இறைச்சிக் கடையில் அடிக்கடி கோழி இறைச்சி வாங்கி வந்தது தெரியவந்தது.

அச்சிறுவன் பழையக் கடனைத் தராமல், கடை உரிமையாளரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் இறைச்சிக் கடை மீது அவப்பெயர் ஏற்படுத்த வாட்ஸ்அப்பில் இந்த வதந்தியை பரவ விட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தினர், அந்த நபர் மீது தவறான தகவலைப் பரப்புதல் மற்றும் பொதுஅமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடந்த 2 தினங்களுக்கு முன்புகைது செய்தனர். அந்த நபருக்கு 17 வயதே ஆவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தவறான முறையில் வதந்தி பரப்பிய அந்தச் சிறுவன், தான் தவறான தகவல் பரப்பியதாகவும் தான் கூறிய தகவல் தவறு என்றும் கூறும் மற்றொரு புதிய வீடியோ வாட்ஸ்அப்பில் வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x