Last Updated : 25 Feb, 2020 04:12 PM

1  

Published : 25 Feb 2020 04:12 PM
Last Updated : 25 Feb 2020 04:12 PM

ராஜபாளையம் - செங்கோட்டை நான்குவழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க கோரிக்கை: எம்.பி. தலைமையில் தென்காசி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தென்காசி

ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை என்எச் 744 நான்குவழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்கக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொல்லம்- திருமங்கலம் நான்குவழிச் சாலை பணியை ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை மாற்றுப் பாதையில் அமைக்கக் கோரி என்எச் 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ, திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், எச்எச் 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்க தலைவர் மாடசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

என்எச் 744 தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக்கும் பணிக்காக வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்த உத்தேசித்து கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான்குவழிச் சாலை வருவதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். ஆனால், தேசிய நெடுஞ்சாலையை விவசாய நிலங்களை பாதிக்காதவாறு, மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள நான்குவழிச் சாலை திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகராட்சிகளுக்கு வழங்கப்படாத முக்கியத்துவம் வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு மட்டும் தரப்பட்டுள்ளது.

இந்த வழியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டால் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி பகுதி மக்கள் மீண்டும் பழைய சாலையை பயன்படுத்தியே சிங்கிலிப்பட்டி வரை செல்லக்ககூடும். சாலை ஊர்களை இணைக்காததால் பேருந்துகளும் பழைய வழியையே பயன்படுத்த நேரிடும். இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ள நான்குவழிச் சாலை செயலற்றதாகவே கிடக்கும்.

விவசாயிகள் பரிந்துரைத்துள்ள மாற்றுப் பாதையில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். உணவு மற்றும் நீராதாரங்கள் அழிவில் இருந்து காக்கப்படும்.

9 கிலோமீட்டடர் தூரம் மிச்சமாகும். மேலும், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, குற்றாலம் செல்லும் வாகனங்கள் புதிய சாலையை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட தலைநகரான தென்காசி இணைக்கப்படும்.

குற்றாலம் செல்லும் வாகனங்களுக்கும் இந்த சாலை பயன்படும். எனவே, இது தொடர்பாக பரிசீலனை செய்து, நான்குவழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x