Published : 18 Aug 2015 08:46 AM
Last Updated : 18 Aug 2015 08:46 AM

செப்டம்பர் 9,10-ல் நடக்கிறது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு பணிகள் தீவிரம் - தொழிற்பேட்டைகளை பார்வையிட சிறப்பு வசதி

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக் கான பணிகள் சென்னையில் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநாட்டுக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு முத லீட்டாளர்கள், அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை, தொழிற் பூங்காக்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தொழில்துறை செய்துள்ளது

தமிழகத்துக்கு அதிக முதலீடு களை ஈர்க்கும் வகையில், தமிழக தொழில்துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்குமேல் முதலீட்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஏற்பாடுகளுக்காக தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.

மாநாட்டில் கண்காட்சி, கருத்தரங் கம், முதலீட்டாளர்கள் சந்திப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல்வேறு விஷயங்கள் இடம் பெறுகின்றன.இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டுக்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள், பார்வையாளர்கள், கருத்தரங்கு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை தற்போது 2,500-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. 3,500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பர் என நம்புகிறோம். வெளி நாடுகளில் இருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த எண் ணிக்கை ஆயிரமாக உயரும். பதிவு செய்பவர்களுக்காக கைபேசி செயலி (mobile app) ஒன்றையும் உருவாக்கியுள்ளோம்.

அதில் சென்னையில் தங்குவதற் கான ஹோட்டல்கள், பிரபல வாகன ஏற்பாட்டு நிறுவனங்கள் குறித்தும் அவற்றுக்கான கட்டணங்கள் குறித் தும் விவரங்களை அளித்துள்ளோம். முதலீட்டாளர்கள் இதைப் பயன் படுத்தி பயணத் திட்டத்தை வகுக்கலாம்.

மேலும், முதலீட்டாளர்கள் சென் னைக்கு அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தொழிற்பூங்காங்களை பார்வையிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாநாட் டுக்கு முன்பு 2 நாட்கள், பின்பு 2 நாட்கள் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற் கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் பிக்கி இணைந்து செய்துள்ளன.

மாநாடு தொடர்பாக வெளிநாடு களில் நடத்தப்பட்டு வந்த கண்காட்சிகள் முடிந்துவிட்டன. தற்போது சென்னையில் நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த முதலீட்டுக்கான கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்கள் இம்மாத இறுதி வரை நடக்க உள்ளன. முதலீட்டாளர்களை கவரும் வகையில் லண்டன், பிராங்க்பர்ட், ஹாங்காங், சிங்கப்பூர், அபுதாபி உள்ளிட்ட 6 முக்கிய வெளிநாட்டு விமான நிலையங்கள், இந்தியாவில் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், சென்னை விமான நிலையங்களில் மாநாடு குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x