Last Updated : 24 Feb, 2020 03:15 PM

 

Published : 24 Feb 2020 03:15 PM
Last Updated : 24 Feb 2020 03:15 PM

மஸ்கட் நாட்டில் தவிக்கும் 6 பேரை மீட்க வேண்டும்: தென்காசி ஆட்சியரிடம் குடும்பத்தினர் கோரிக்கை

தென்காசி

மஸ்கட் நாட்டில் சிக்கித் தவிக்கும் 6 பேரை மீட்டு அழைத்துவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்களது உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், 20 பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும், 10 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்புப் பெட்டிகளையும் வழங்கினார்.

அதேபோல், கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டபோது விபத்தில் உயிரிழந்த கடையநல்லூர் வட்டம் ஆய்க்குடி கிராமம் கம்பிளியைச் சேர்ந்த குத்தாலசங்கரன், நாய் கடித்து உயிரிழந்த திருவேங்கடம் வட்டம், ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்நத சந்தோஷ் என்ற சிறுவனின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆலங்குளம் வட்டம், நெட்டூர் அருகே உள்ள மருதபுரம் கிராமத்தைச் சேர்ந்த முதுப்பாண்டி, அவரது மகன் முருகராஜ், வேல்முருகன், மற்றொரு முத்துப்பாண்டி ஆகியோர் மஸ்கட் நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்களது குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த 6 பேர் மஸ்கட் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றனர். அந்த நிறுவனம் கடந்த 10 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை.

அந்த நிறுவனத்தை நடத்தி வரும் கேரளாவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சம்பளத்தையும் கொடுக்காமல், பாஸ்போர்ட்டையும் கொடுக்காமல் கேரளாவுக்கு திரும்பி வந்துவிட்டார். எங்கள் ஊரைச் சேர்ந்த 6 பேரும், சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி தவிக்கின்றனர். அவர்களை மீட்டு, எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x