Published : 21 Aug 2015 10:40 AM
Last Updated : 21 Aug 2015 10:40 AM
கீழ்ப்பாக்கத்தில் பெண் டாக்டரின் கழுத்தை அறுத்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜேசு(36). பெரம்பலூரில் டாக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி சத்யா(32). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்துகொண்டே முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள கும்மாலம்மன் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கும் சங்கீதா என்ற மாணவியும் சத்யாவுடன் தங்கியிருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து நேற்று காலை சத்யா வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வந்த பிறகு சங்கீதா பணிக்கு சென்று விட்டார். மாலை 3.30 மணியளவில் சங்கீதா வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சத்யா இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டு உரிமையாளர் டான்போஸ்கோவிடம் கூற, அவர் கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சத்யா அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போயிருப்பது தெரிந்தது. மேலும், வீட்டில் வைத்திருந்த பணத்தையும் காணவில்லை. எனவே, சத்யா தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்கு வந்த நபர் அவரது கழுத்தை அறுத்து கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் பீரோவில் இருந்த சங்கீதாவின் நகைகள் கொள்ளையடிக்கப்படாமல் இருந்தன.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர் சத்யாவின் கழுத்தை நெரித்திருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கொலையாளியுடன் சத்யா போராடியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. ஸ்டீல் கட்டிலும் உடைந்து கிடந்தது.
தரை தளத்தில் வீட்டின் உரிமையாளரும், முதல் தளத்தில் இரண்டு மாணவர்களும், 2-வது தளத்தில் சத்யாவும் வசித்தனர். சம்பவம் நடந்தபோது சத்யாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இல்லாததால் அவரது சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. சத்யா தனியாக இருப்பதை அறிந்த நபரே இந்த செயலை செய்திருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்தனர். கொலையாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலையாளியுடன் சத்யா போராடியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. ஸ்டீல் கட்டிலும் உடைந்து கிடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT