Published : 19 Feb 2020 04:39 PM
Last Updated : 19 Feb 2020 04:39 PM
திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க காலை முதலே திண்டுக்கல் புறவழிச்சாலையில் இஸ்லாமியர்கள் திரண்டனர். முன்னதாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் டி.ஐ.ஜி., நிர்மல்குமார்ஜோஷி, திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் ஆகியோர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீஸார் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் புறவழிச்சாலையில் இருந்து தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்த நூற்றுக்கணக்கானோர் நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் அடுத்தகட்டபோராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.
ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெறுதையடுத்து அந்தவழியே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகம் செல்லமுடியாமல் பொதுமக்கள் பலர் தவித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே அமைதியான முறையில் முற்றுகைப்போராட்டம் நடந்துமுடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT