Published : 11 Feb 2020 10:31 AM
Last Updated : 11 Feb 2020 10:31 AM
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, திருவாரூர் மாவட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அமைப் புகளும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நன்னிலம் மாப்பிள்ளை குப்பத்தில் ஓஎன்ஜிசி சார்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பணிகள் தொடங்கியதைக் கண்டித்து, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, மக்கள் அதிகாரம் அமைப்பு, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் 274 பேர் மீது வெவ்வேறு நாட்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
அதேபோல, 2018 பிப்ரவரியில் திருவாரூர் அருகே கடம்பங்குடியில் ஓஎன்ஜிசி செயல்படும் பகுதியில், புதிதாக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறு, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தோண்டப்படுகிறதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போதும், பொது மக்கள் மீது வழக்குகள் தொடரப் பட்டன. மேலும், திருக்கார வாசலில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றதையொட்டி 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுதவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 1,000 பேர் மீது வெவ்வேறு நாட்களில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், கடந்த 3 ஆண்டுகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.
தற்போது, தமிழக முதல்வர் ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் ரத்துசெய்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கைக்காக போராடிய வர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறியதாவது:
காவிரி டெல்டாவில் விவசாயத் தொழிலை நம்பியே லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்தால், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற சமூக அக்கறையுடன் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்திய போராட்டங்களில், பொதுமக்களும் பங்கேற்று உள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் நியாயத்தை உணர்ந்து, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்துவிட்ட நிலையில், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்வதே நியாயமானது. அவ்வாறு வழக்குகளை ரத்து செய்தால், விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக முதல்வர் இதைப் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
இதேகருத்தை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, சமூக ஆர்வலர்கள் திருவாரூர் வரதராஜன், மருத்துவர் பாரதிசெல்வன் உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT