Published : 25 Aug 2015 09:46 AM
Last Updated : 25 Aug 2015 09:46 AM
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 8 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப்-2 தேர்வு மூலமாக துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 1,130 காலியிடங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் நேற்று தொடங்கியது.
இதில், தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த விருத்தாசலத்தைச் சேர்ந்த சி.ஜெயப்ரீதா, 2-ம் இடம் பெற்ற சென்னையைச் சேர்ந்த டி.ரங்கநாதன் வெங்கட்ராமன், 3-ம் இடத்தைப் பிடித்த விருதுநகரைச் சேர்ந்த சாந்தலட்சுமி, 4-ம் இடம் பெற்ற சி.சிவன்காளை, 5-ம் இடம் பெற்ற தமிழரசி, 6-ம் இடம் பெற்ற ரூபியா பேகம், 8-ம் இடம் பெற்ற எம்.சாய் ஸ்ரீமாரி, 9-ம் இடம் பெற்ற வி.ராஜா, 10-ம் இடம் பெற்ற எம்.அறிவழகன் ஆகியோர் துணை வணிகவரி அதிகாரி பதவியை தேர்வு செய்தனர். 7-ம் இடத்தைப் பிடித்த எஸ்.அமுதா மட்டும் டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) பணியை தேர்வுசெய்தார்.
இவர்கள் அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் பணி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேற்கண்ட 10 பேரில் சாய்ஸ்ரீமாரி, ராஜா தவிர மற்ற 8 பேருமே பொறியியல் பட்டதாரிகள். முதலிடம் பெற்ற ஜெயப்ரீதா எம்.இ. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முயற்சியிலேயே அவருக்கு அரசுப் பணி கிடைத்துவிட்டது. சாய்ஸ்ரீமாரி, எம்எஸ்டபிள்யூ பட்டதாரி, ராஜா எம்பிஏ பட்டதாரி ஆவர்.
பணி ஒதுக்கீட்டு ஆணையை வழங்குவதற்கு முன்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது முதல்முறையாக குரூப்-2 தேர்வில் அனைவரின் தர வரிசைப் பட்டியலையும், ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி மற்றும் காலியிடங்களின் விவரங்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடுகிறோம். கலந்தாய்வுக்கு வருபவர்கள் முந்தைய நாளே காலியிடங்களை தெரிந்துகொண்டு வருவதால் கலந்தாய்வின்போது அவர்கள் பணியை தேர்வுசெய்ய மிகவும் வசதியாக இருக்கும்.
கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 800 காலியிடங்களை நிரப்ப செப்டம்பர் மாதம் அறிவிப்பும் வெளியாகும். குரூப்-4 பணிகளுக்கு காலியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. விரைவில் அதற்கும் அறிவிப்பு வெளியிடப்படும்.
அதேபோல், குரூப்-2 (நேர் முகத் தேர்வு அல்லாதது) பணிகளில் 700 காலியிடங்களை நிரப்பவும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில் 20 இடங்களை நிரப்ப வும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக அலுவலர் (கிரேடு-3, கிரேடு-4) பதவிகளில் 20 காலியிடங்களை நிரப்பவும், ஜெயி லர், உதவி ஜெயிலர் பதவிகளில் 70 காலியிடங்களை நிரப்பவும் விரை வில் அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT