Published : 10 Feb 2020 10:15 AM
Last Updated : 10 Feb 2020 10:15 AM
சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புழலைச் சேர்ந்த எம்.வி.சிவமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘‘சென்னை பெருநகர நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் நிலத்தடி நீரைப் பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நிலத்தடி நீரைப் பாதுகாக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கெனவே பிறப்பித்து இருந்த உத்தரவில், ‘‘குடிநீர்விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிலத்தடி நீரை அவற்றின் விருப் பப்படி உறிஞ்சுகின்றன.
நிலத்தடி நீர் சரிவு
இதனால் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. எனவே தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை எடுத்து வியாபாரம் செய்யும் குடிநீர் நிறுவனங்கள் எத்தனை உள்ளன?
அதில் எத்தனை நிறுவனங் கள் சட்டவிரோதமாக செயல்படு கின்றன? அவற்றின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்களை மூடிவிட்டு அதுதொடர் பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தமிழகம்முழுவதும் 200-க்கும் மேற் பட்ட குடிநீர் நிறுவனங்கள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதிகாரிகள் அலட்சியம்
இதையடுத்து நீதிபதிகள், “ஏற்கெனவே நாங்கள் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர்நிறுவனங்களை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தோம். ஆனால் தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தற்போது சட்டவிரோத நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளது. இது கண்டனத்துக்குரியது.
நிலத்தடி நீரின் அருமை தெரியாமல் அதிகாரிகள் அலட்சி யம் செய்கின்றனர். எனவே இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கை வரும் பிப்.26-க்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் இந்த தொகையை தங்களின் சொந்தப்பணத்தில் இருந்து செலுத்த வேண்டி வரும்” என எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT