Published : 09 Feb 2020 09:50 AM
Last Updated : 09 Feb 2020 09:50 AM
தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய பிரதான கட்சிகளும் தமிழகத்தை முன்னேற்றுவதில் ஒற்றுமையாக உள்ளன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி மண்டலம் (மெப்ஸ்) வளாகத்தில் 2016 -17மற்றும் 2017-18 ஆண்டுகளின் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறந்த 38 ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 80 விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய அளவில் முட்டை ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாட்டின் 7 சதவீத உணவு உற்பத்தியில் தமிழகம் பங்கு வகிக்கிறது. நாட்டில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, தோல் ஏற்றுமதியில் 50 சதவீத பங்கு தமிழகத்துக்கு சொந்தம். 2018-19 ஆண்டில் ரூ.2,18,312 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் நாட்டிலேயே 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
நான் எங்கு சென்றாலும் உங்கள் கட்சியினர் (திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலுவை சுட்டிக்காட்டி) போராட்டம் நடத்துகின்றனர். ஆனாலும், தமிழகம் முழுவதும் சுற்றி எனது வேலையை கவனித்து வருகிறேன். மகாராஷ்டிராவைவிட முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டில் 1,751 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. நாட்டின் 20 சதவீத பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில் உள்ளன.
தமிழகத்தில் உள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் தமிழகத்தை முன்னேற்றுவதில் ஒற்றுமையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசும்போது, ‘‘நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 41 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. தமிழகத்தில் தொழில் தொடங்க, ஒற்றைச் சாளர முறையில் 11 துறைகளை இணைத்து உடனடி அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் 930 சிறு குறு தொழில் நிறுவனங்களும், 62 பெரிய தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாக தமிழகம் போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளது. 2018- 19 ஆண்டு ரூ.56,803 கோடி முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு பேசும்போது, ‘‘ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து வருகிறது. தமிழகத்தில் இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்புதூர் தொகுதியில் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்க தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் திமுக எம்எல்ஏவான எஸ்.ஆர்.ராஜா, சிறப்பு பொருளாதார மண்டலமேம்பாட்டு ஆணையர் எம்.கே.சண்முகசுந்தரம், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மண்டல தலைவர் தினேஷ் குமார் வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT