Published : 22 Aug 2015 08:05 AM
Last Updated : 22 Aug 2015 08:05 AM
கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் ஊராட்சிகளுக்கு ரூ.200 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ள தாக காஞ்சிபுரம் மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் வீராசாமி பேசும்போது, ‘கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலைய நிர்வாகம், அணுமின் நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்காக எடையூர், குன்னத்தூர், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், நெய்குப்பி மற்றும் கொட்டமேடு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5,445 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதில் கட்டிடங்கள் அமைத்துள்ளது. ஆனால், இந்த நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான சொத்து வரியை ஊராட்சி நிர்வாகங்களுக்கு செலுத்தாமல் உள்ளது.
நோட்டீஸ்
மேலும், அணுமின் நிலையத் துக்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வரி கேட்புக்கான நோட்டீஸும் அளிக் காமல் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊராட்சிகளுக்கு நிதிபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகள் ஏதும் மேற்கொள்ள முடியவில்லை.
அணுமின் நிலைய நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ள 200 கோடி ரூபாய் வரையிலான சொத்து வரி தொடர்பாக, மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் பலமுறை புகார் தெரிவித்துள்ளேன். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்றார்.
இதற்கு, ஆட்சியர் சண்முகம், ‘வருவாய் உள்ள நிர்வாகம் ஊராட்சிகளுக்கு வரியை நிலுவையில் வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும், வரிகேட்பு நோட்டீஸ் அளிக்கப்படாமல் உள்ளது குறித்து, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விசாரிக்கப்படும்’ என்றார்.
சிமெண்ட் சாலை
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள்: ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், ‘மாவட்ட குழு உறுப்பினர்களின் நிதிகளில், ஊராட்சி பகுதிகளில் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை ரீதியானது. எனினும், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
இதை தொடர்ந்து, மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சி மற்றும் சாலை பணிகள் தொடர் பாக ஆலோசிக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில், அனைத்துறை அதி காரிகள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT