Published : 08 Feb 2020 07:39 AM
Last Updated : 08 Feb 2020 07:39 AM
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பழநி முருகன் கோயிலில் தேரோட்டமும், வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிப்.2-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மலைக்கோயிலுக்குச் செல்ல யானைப் பாதையும், கீழே இறங்க படிப் பாதையும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதலே பக்தர்கள் மலைக்கோயிலில் தரிசனத்துக்கு 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் மலைக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் தங்கத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடுவது வழக்கம். இந்த முறை இவற்றில் போதிய தண்ணீர் இல்லாததால், இடும்பன்குளம் பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் குளிக்க ஏதுவாக ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.
தேரோட்டத்தில் யானை கஸ்தூரி
பழநி பெரியநாயகியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வீற்றிருக்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக பழநி கோயில் யானை தைப்பூச விழா காலங்களில் தேக்கம்பட்டியில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு சென்றதால் தேரோட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் முடிந்து தைப்பூச விழா நடைபெறுவதால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் யானை கஸ்தூரி, இந்த ஆண்டு தைப்பூச விழாவில் பங்கேற்கிறது.
கஸ்தூரி யானை பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதற்கு உதவியாக தேரின் பின்னால் இருந்து தேரை தனது நெற்றியால் தள்ளி உதவும். சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோன்று, கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவியுள்ள சத்திய ஞான சபையில் இன்று ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. ஜீவ காருண்யத்தை போதித்த வள்ளலார் இங்கு ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்கு பின்னே நிலைக் கண்ணாடியும் உள்ளன. கண்ணாடியை மறைக்கும் வண்ணம் 7 நிறங்களைக் கொண்ட 7 திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் எனப்படுகிறது.
இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப் பூசத்தன்று வள்ளலார் தொடங்கி வைத்தார். தைப் பூசத் திருநாளான இன்றும் (பிப்.8) இந்த ஜோதி தரிசனம் நடக்கிறது. தைப் பூசத்தன்று மட்டுமே 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காணலாம். மற்ற 11 மாத பூசங்களில் 6 திரைகள் மட்டுமே விலக்கப்படும்.
ஜோதி தரிசன நேரங்கள்
தைப் பூச நாளான இன்று (பிப்.8) ஜோதி காட்டப்படும் நேரங்கள்: காலை 6.00 மணி, 10.00 மணி, நண்பகல் 1.00 மணி, இரவு 7 மணி, 10.00 மணி. நாளை (பிப்.9) காலை 5.30 மணி. தைப்பூச விழாவையொட்டி வடலூரில் வெளிநாட்டு, தமிழக, உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT