Published : 08 Feb 2020 07:25 AM
Last Updated : 08 Feb 2020 07:25 AM
கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக, அமெரிக்காவின் ஹால்டியா நிறுவன தலைவருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த 2015-ம்ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2 லட்சத்து42 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன.
தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 501 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தற்போது வரை 53 திட்டங்களுக்கான தொழில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள 219 திட்டங்களுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் முதல்வர் பழனிசாமி 13 நாட்கள்வெளிநாடு சுற்றுலா மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்குச் சென்றார். அந்த நாடுகளில், தமிழகத்தில் ரூ.8,835 கோடி முதலீடு செய்யும் வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சில நிறுவனங்களுடன் தொழில் தொடங்குவதுதொடர்பான கொள்கை ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜன.13-ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற, தொழில் வழிகாட்டி மற்றும் ஒற்றைச்சாளர அனுமதி தொடர்பான கூட்டத்தில்,ரூ.6,608 கோடி மதிப்பிலானதொழில் திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜன.20-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 14-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
தென்மாவட்டங்களில்...
இதில், தென் மாவட்டங்களில் 6 தொழில் நிறுவனங்கள் குறிப்பாக, ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில், தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு மையம் அமைக்க அல்கெராபி நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டுமுதல்வர் அமெரிக்கா சென்றபோது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் கொள்கை அளவில் தொழில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலியசுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையை, ரூ.50 ஆயிரம் கோடியில் நிறுவ ஹால்டியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர்பழனிசாமியை அவரது முகாம்அலுவலகத்தில், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனதலைவர் புரனேந்து சாட்டர்ஜி, நிர்வாக துணைத் தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோர்நேற்று சந்தித்தனர். அப்போது, கடலூரில் பெட்ரோலியம் சுத்திகரிப்புஆலை அமைப்பது, அதற்கான இடஒதுக்கீடு, நிர்வாக அனுமதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழில்துறை செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT