Published : 08 Feb 2020 07:16 AM
Last Updated : 08 Feb 2020 07:16 AM

தமிழக அரசின் நடப்பு ஆண்டு பட்ஜெட் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்: பழங்குடியின இளைஞர் முகாமில் துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

நேரு யுவகேந்திரா சங்கதன் அமைப்பு சார்பில் 12-வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாமின் நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட சேலம் மாவட்ட குழுவுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்குகிறார். படம்: க.பரத்

சென்னை

நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மக்கள், நலன் சார்ந்து அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மத்திய அரசின் நேரு யுவகேந்திரா சங்கதன் அமைப்பு சார்பில் 12-வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம் சென்னையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது இம்முகாமில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இம் முகாமின் நிறைவு விழா சென்னை அடையாறில் உள்ள அரசு இளைஞர் விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேசியதாவது:

இளைஞர்கள் கையில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது என சுவாமி விவேகானந்தர் கூறினார். அதற்கேற்ப இன்றைய இளைஞர்கள் திறமையானவர்களாக உள்ளனர். குறிப்பாக பழங்குடியின இளைஞர்களின் திறன்கள் அளப்பரியது. அவர்களின் திறமைகளை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும். அந்த வகையில்தான் இந்த பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் பழங்குடியின மக்கள், மற்ற மாநிலங்களின் கலாச்சாரங்களை நேரடியாகத் தெரிந்து கொண்டு ஒன்றிணைந்து வாழ வழிவகுக்கும்.

நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். உங்கள் முன்னோர்கள் வழியில் நின்று இன்றைய சமுதாய மாறுதல்களுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து நீங்கள் வாழ்வில் உயர்ந்திட வேண்டும். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய ஆயுதப்படை காவல்துறை துணைத்தலைவர் சோனல் வி மிஸ்ரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில நேரு யுவகேந்திரா அமைப்பின் இயக்குநர் எம்.என்.நடராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.சம்பத்குமார், செந்தில்குமார் பங்கேற்றனர்.

அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட், அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதுடன் அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் சிறப்பானதாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x