Published : 07 Feb 2020 07:49 AM
Last Updated : 07 Feb 2020 07:49 AM

தயாரிப்பாளர், பைனான்சியர் வீடுகளில் 2-வது நாளாக சோதனை; ரூ.300 கோடிக்கு ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்: அசையா சொத்துகள் மீதான முதலீடுகள் குறித்து நடிகர் விஜய், மனைவியிடம் வருமான வரித்துறை விசாரணை

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

நடிகர் விஜய், தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அசையா சொத்துகள் மீதான முதலீடுகள் குறித்து நடிகர் விஜய், மனைவியிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த 2 நாள் சோதனையில் கிடைத்துள்ள, கணக்கில் வராதபணம் மற்றும் சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.300 கோடி அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25-ம் தேதிநடிகர் விஜய், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான ‘பிகில்’ திரைப்படம் வெளியானது. மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், அதிக அளவு வசூலைக் குவித்ததாக அவர்களது ரசிகர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இந்தப் படத்துக்காக விஜய் ரூ.30 கோடி வரை சம்பளம் பெற்றதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் திரைப்பட விநியோகப் பிரிவிலும் பங்களிப்பை ஆற்றி வருகிறது. இந்தியா முழுவதும் ஏஜிஎஸ் என்ற பெயரில் மல்டிப்ளக்ஸ் திரையரயங்குகளை உருவாக்கி படங்களை ரிலீஸ் செய்தும் வருகிறது.

இந்நிலையில், ‘பிகில்’ படத்தைதயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், படத்துக்கு பைனான்ஸ் செய்தசினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் சோதனை

இதைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள ஏஜிஎஸ்கல்பாத்தி அகோரம் வீடு, அலுவலகம், ஏஜிஎஸ் திரையரங்குகள், சென்னை மற்றும் மதுரையில் உள்ள பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு, அலுவலகம், அவரது நண்பர் வீடுகளில் நேற்று முன்தினம் காலை ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்து, அவரை விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய்யின் வீட்டில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரது தந்தையும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடந்தது.

இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்து நடந்தது. அதேபோல பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய்யிடம் 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.

சம்பளம் எவ்வளவு?

‘பிகில்’ படத்தில் நடிப்பதற்காக பெற்ற சம்பளம் எவ்வளவு?அதில் நடித்த சக கலைஞர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு? சம்பளத்தை எந்த வடிவில் பெற்றீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

விஜய்யின் சொத்து விவரங்கள், அவர் செய்திருக்கும் முதலீடுகள் பற்றியும் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு விஜய் அளித்த தகவலை வாக்குமூலமாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 23 மணி நேரம் நடந்த விசாரணை நேற்றிரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.

இதற்கிடையே, வருமான வரித் துறையினர் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் வசூல் ரூ.300 கோடி என்ற தகவலின் அடிப்படையில், பட தயாரிப்பாளர், பிரபல நடிகர், விநியோகஸ்தர், பைனான்சியர் வீடு, அலுவலகம் உட்பட 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் தயாரிப்பாளர், பைனான்சியரின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு, அலுவலகம், ரகசிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடிரொக்கம், சொத்து ஆவணங்கள்,அடமானப் பத்திரங்கள், காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சோதனையில் கிடைத்துள்ள, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.300 கோடி அளவுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய விநியோகஸ்தர் கட்டுமான நிறுவன முதலாளியாகவும் உள்ளார்.பறிமுதல் செய்யப்பட்ட உண்மை ஆவணங்கள் அனைத்தும் அவரது நண்பரின் மறைவிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆவணங்கள் ஆய்வு

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நடிகருக்கு வழங்கப்பட்ட சம்பளம், செலவு உள்ளிட்டவை குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

நடிகர் தொடர்பான சோதனையை பொறுத்தமட்டில், அசையா சொத்துகளில் அவர் செய்துள்ள முதலீடு, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் அவர் பெற்றுள்ள சம்பளத் தொகை ஆகியவை முக்கிய விசாரணைக்குரிய அம்சங்களாக உள்ளன. சில வளாகங்களில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு அறிக்கையில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x