Published : 04 Feb 2020 07:41 AM
Last Updated : 04 Feb 2020 07:41 AM

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மத்திய பாஜக அரசுக்கு வலியுறுத்தல்: மக்களிடம் கையெழுத்து பெற்றார் கே.எஸ்.அழகிரி

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று மாலை தள்ளுவண்டி வியாபாரிகளிடம் கையெழுத்து பெறுகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர்.

சென்னை

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சென்னை திருவல்லிக்கேணி நெஞ்சாலையில் பொதுமக்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்து பெற்றார்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்சிஆர்), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அறிவித்தது.

அதன்படி கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று நடைபாதை வியாபாரிகள், பொதுமக்களிடம் குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகளை எடுத்துக் கூறி கையெழுத்து பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ‘‘குடியுரிமை சட்டம், என்சிஆர், என்பிஆர் ஆகியவை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரானது. இந்த சட்டத்துக்கு எதிராக நாடே கொந்தளித்து எழுந்துள்ளது. நாடு முழுவதும் போராட்டம் நடைபெறாத நாளே இல்லை. மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து குடியுரிமை சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x