Published : 03 Feb 2020 04:34 PM
Last Updated : 03 Feb 2020 04:34 PM
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், பிப்.1-ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், தோட்டக்காரரான குணசேகர் என்பவரை மட்டும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று (பிப்.3) சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.
தண்டனை விவரங்கள்:
அதன்படி, ரவிகுமார், சுரேஷ், பழனி ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில், ரவிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன், சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. அபிஷேக், ராஜசேகர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், எரால் பிராஸுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தீனதயாளன், ராஜா, சூர்யா, சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நீதிபதி வந்தவுடனேயே 'மரண தண்டனை விதிக்கப்படத்தக்க குற்றங்களைப் புரிந்திருக்கிறீர்கள். எனினும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதனைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்குவதாக' அறிவித்தார். அதன்படிதான் தண்டனை அளிக்கப்பட்டது. இதில், ஒருவருக்கு மிக குறைந்தபட்ச தண்டனையான 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது".
இவ்வாறு வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "இருக்கின்ற சாட்சியங்களின் அடிப்படையில் அதிகபட்ச தண்டனை வழங்கியிருக்கலாம் என்பதுதான் அரசுத் தரப்பின் கருத்து. சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அரசுத் தரப்பு மிகச்சரியாக நிரூபித்திருக்கின்றது. உயர் நீதிமன்றத்திலோ உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு சென்றாலும் குற்றமும் தண்டனையும் மாறுவதற்கு வாய்ப்பில்லை.
விசாரணை சரியாக நடத்தப்படவில்லை, சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி, மனுக்கள் ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இதுசம்பந்தமாக பல்வேறு முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த வழக்கை அரசு ஒரு வருடத்திற்குள் நடத்தியிருக்கிறதென்றால், அது சந்தித்திருக்கிற இடையூறுகள் ஏராளம். அவை வெளியில் வரவில்லை. ஒவ்வொரு நடைமுறையிலும் பல்வேறு காலகட்டத்தில், 50-60 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பல இடையூறுகளைத் தாண்டி, நீதிமன்றம் ஒரு வருடத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
முக்கியமான சாட்சியாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியுடன் சேர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்தது மருத்துவ சாட்சிதான். அந்தந்தத் துறைகளில் நிபுணர்களாக உள்ள அரசு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்து சாட்சியம் அளித்தனர். பரிசோதனையின் முடிவுகள், அரசுத் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளன. உரிய சாட்சியங்களின் அடிப்படையில் தான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது" என வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து, இத்தீர்ப்பு அரசுத் தரப்புக்கு தோல்வியா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "இது அரசுத் தரப்புக்கு தோல்வியல்ல. அரிதிலும் அரிதான வழக்குகளில் தான் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் பல சம்பவங்களில் தெளிவுபடுத்தியிருக்கிறது. போக்சோ சட்டத்தில் 2018, ஏப்ரலில்தான் திருத்தம் வந்தது. சம்பவம் நடைபெற்றபோது திருத்தம் வராததால் இந்த வழக்குக்கு மரண தண்டனை பொருந்தாது.
தமிழக அரசு, சென்னை காவல்துறையுடன் கலந்தாலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்வோம்" என வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT