Published : 03 Feb 2020 08:45 AM
Last Updated : 03 Feb 2020 08:45 AM

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல்வாதிகளால் பெரிதும் இடையூறு: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆதங்கம்

தமிழக வனத் துறை சார்பில் கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வனத் துறை அமைச்சர் சி.சீனிவாசன் பரிசு வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம், துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், துறை தலைவர் பி.துரைராசு, மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாச்சலம், தலைமை வன உயிரின காப்பாளர் எஸ்.யுவராஜ், மாநில ஈரநிலங்கள் ஆணைய உறுப்பினர் செயலர் வி.கருணபிரியா ஆகியோர்.படம் பு.க.பிரவீன்

சென்னை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல்வாதிகள் இடையூறு செய்வதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும்மாநில ஈர நிலங்கள் ஆணையம் சார்பில் உலக ஈர நில தினத்தை முன்னிட்டு, ஈர நிலம் மற்றும் பல்லுயிர் பரவல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கிண்டி சிறுவர்பூங்காவில் நேற்று நடைபெற்றது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று,மாநில ஈரநில ஆணைய லச்சினையை வெளியிட்டார். தொடர்ந்து ஆணையத்தின் இணையதளத்தை தொடங்கிவைத்தார். பின்னர், ஈரநில தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அரசு சார்பில் ரூ.20 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நில சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நம் மக்கள் ஏதாவது காலி இடமிருந்தால் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறார்கள். அதனால் நீர்வழிப்பாதை தடைபடுவதை அவர்கள் உணர்வதில்லை. நீர்நிலைகளை யாராவது ஆக்கிரமித்திருந்தால், எவ்வளவு விலை கொடுத்தாவது அதை அகற்றுங்கள் என நீதிமன்றங்கள் நல்ல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அரசியல்வாதிகள் இடையூறாக உள்ளனர். அதையும் மீறி தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. நீர்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது என்ற உணர்வு மக்களுக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கருத்தரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு வனத்துறை தலைவர் பி.துரைராசு, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாச்சலம், தலைமை வன உயிரின காப்பாளர் எஸ்.யுவராஜ், மாநில ஈரநில ஆணைய உறுப்பினர் செயலர் வி.கருணபிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறு வயதில் எருமைகள் மீது ஏறி விளையாடி இருக்கிறேன்’

அரசு தலைமைச் செயலர் க.சண்முகம், இக்கருத்தரங்கில் பேசியதாவது:

வெட் லேண்ட் (Wet Land) என்பதை ஈரநிலம் என மொழிபெயர்த்துள்ளது பொருத்தமாக இல்லை. நஞ்சை நிலம், சதுப்பு நிலங்களைத்தான் வெட் லேண்ட் என்கிறோம். தமிழ் சமுதாயம் மிக நேர்த்தியாக நிலங்களை வகைப்படுத்தி உள்ளது. வயலும், வயலைச் சார்ந்த இடமும் மருத நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனுக்கு உயிர்நாடியாக திகழ்வது இந்த மருத நிலம்தான். அங்குதான் உணவு உற்பத்தியாகிறது. எனவே மருத நிலம் என்பதுதான், வெட் லேண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு பொருத்தமாக இருக்கும்.

நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் ஆறுகளை ஒட்டி மனித நாகரீகங்கள் அமைந்துள்ளன. நீரும், நிலமும் ஒன்றிணைந்து இருப்பது மருத நிலத்தில்தான். அப்பகுதி பசுமையாக இருப்பதால், அங்கு 40 சதவீத உயிரினங்கள் வாழ்கின்றன. மருத நிலத்தின் உயிர்நாடி எருமை மாடுகள். நான் சிறுவனாக இருக்கும்போது, எங்கள் பகுதியில் நிறைய எருமை மாடுகள் இருந்தன. அப்போது, குளம், குட்டைகளிலெல்லாம் நீர் நிறைந்திருக்கும். அதில் எருமை மாடுகள் நீர் குடிக்கும். நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எருமை மாட்டின்மீது அமர்ந்து அதன் கொம்புகளை கையில் பிடித்துக்கொண்டு, பைக் ஓட்டுவது போன்று விளையாடி இருக்கிறோம். இப்படி விளையாடிய நீர்நிலைகள் இப்போது வறண்டுவிட்டன. காடுகள் மனிதனுக்கு நுரையீரல் போன்றவை. மருத நிலம் இதயம் போன்றது. பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக உள்ள மருத நிலத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உணர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x