Published : 03 Feb 2020 07:26 AM
Last Updated : 03 Feb 2020 07:26 AM
எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கை முழுமையாக எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்தது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கைப்பற்றப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. போலீஸ் காவல் முடிந்து கடந்த 31-ம் தேதி நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர் கைதுகள்
எஸ்.ஐ. கொலை வழக்கு தொடர்பாக டெல்லி, பெங்களூரு, தென்காசி, காஞ்சிபுரம், ராமநாதபுரம் என பல பகுதிகளிலும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தீவிரவாத அமைப்புகளுடன் தவுபீக், அப்துல்ஷமீம் ஆகியோருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, இவ்வழக்கு முழுமையாக என்ஐஏ வசம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாககேரள மாநிலம் கொச்சியில் உள்ளஎன்ஐஏ அலுவலகத்தில் எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக தவுபீக், அப்துல் ஷமீம் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்.ஐ. கொலைவழக்கு தொடர்பான ஆவணங்களை நாகர்கோவில் நீதிமன்றத்தில் இருந்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான பணியில் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டிஜிபியிடம் கோரிக்கை
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு இதுவரை என்ஐஏவுக்கு மாற்றப்படவில்லை. அதேநேரம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழக்கை தங்கள் வசம் ஒப்படைக்க தமிழக டிஜிபி திரிபாதியிடம் என்ஐஏ கோரிக்கை வைத்துள்ளது. எனவே, இவ்வழக்கு விரைவில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் இருந்து என்ஐஏ நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். அதன் பின்னர் என்ஐஏ வசம் வழக்கு முழுமையாகச் செல்லும். அதற்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT